திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் ஒரு பழங்குடியினர் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் வெறும் 30 மாணவர்கள் மட்டும்தான் பள்ளிக்கூடத்திற்கு முறையாக வருவார்கள். அவர்களும் வீட்டில் ஏதாவது வேலை இருந்தால் பள்ளிக்கு வரமாட்டார்கள். இந்நிலையில் மஹாலக்ஷ்மி என்பவர் அப்பள்ளிக்கு ஆசிரியராக வந்து சேர்கிறார். மிகுந்த உற்சாகத்துடன் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கலாம் என்று ஆசிரியை பள்ளிக்கு செல்கிறார். ஆனால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்று அந்த ஊர் மக்களிடம் கேட்கிறார்.அதற்கு மாணவர்கள் அனைவரும் மதியம் சாப்பாடு மணி அடிக்கும்போது வருவார்கள். சாப்பாட்டை வாங்கி தின்றுவிட்டு சென்று விடுவார்கள் என்று அவ்வூர் மக்கள் கூறினர். இதனால் மிகவும் மனம் உடைந்து போனார் மஹாலக்ஷ்மி.
அடுத்தநாள் அவரே மாணவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்கள் பெற்றோர்களிடம் பேசுகிறார். அதற்கு அவர்கள் என் பிள்ளைகள் படித்தால் படிக்கிறார்கள் இல்லை என்னுடன் வேலை செய்கிறார்கள் என்று கோவத்தோடு பேசினார்கள். இருந்தாலும் அந்த ஆசிரியை நம்பிக்கை இழக்கவில்லை. தினமும் மாணவர்கள் வீட்டுக்கு சென்று மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பேசுவார். இதனால் பெற்றோர்கள் மனம் இறங்கி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில் அவ்வாசிரியை மாணவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு முடி வெட்டுவது,நகம் வெட்டுவது ,குளிப்பாட்டுவது என்று எல்லா வேலையும் இவரே செய்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்துவார். புதுப்புது விளையாட்டுகள் சொல்லி தருவார். இதனால் மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்கு வர தொடங்கினார்கள். 13 ஆண்டுகளுக்கு முன்பு மோசமான நிலையில் இருந்த பள்ளிக்கூடம் இந்த ஆசிரியரால் வெகுவாக மாறி வந்தது. அங்கு போடப்படும் மதிய உணவின் தரமும் பெரிய அளவில் மேம்பட்டிருக்கிறது. இப்போது அந்த பள்ளியில் 400 கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.