மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 19 ஆன இன்று மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி கோட்டைகள்,படைகலன் மாதிரிகளின் கண்காட்சியை மாணவர்கள் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், மாமன்னர் சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.