இலங்கையின் அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபச்சே கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து, 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பிரதமராக பதவி ஏற்ற பின் அவர் இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ராஜபக்சேவுக்கு நேற்று காலை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார்.
பின்னர் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, பரஸ்பர வர்த்தம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேலும் வலுவடையச்செய்துள்ளதாக இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்தார்.