நாட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி கொள்கைக்கான செயல் திட்டங்களை, தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்கள் இறுதி செய்திருப்பதாக, மத்திய அரசு கூறியிருக்கிறது.
நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பருவநிலை கொண்ட மண்டலங்கள் இருப்பதால், அனைத்து விதமான இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை இந்தியா கொண்டுள்ளது. அதிகளவில் இயற்கை வேளாண் உற்பத்தியாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆண்டொன்றுக்கு, 60 கோடி டன் அளவிற்கு, அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை இந்தியா உற்பத்தி செய்கிறது.
இந்த வகையில், நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை, 2022ஆம் ஆண்டுக்குள், இரட்டிப்பாக்குவதே, தமது நோக்கம் என்று அறிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அந்த இலக்கை அடைவதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்த வகையில், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் காரணிகளில் ஒன்றான, வேளாண் ஏற்றுமதி கொள்கை, 2018ல் அறிமுகமாகி, அதே ஆண்டில், மத்திய அமைச்சரவை ஒப்புதலையும் பெற்றது.
உருளைக்கிழங்கு, திராட்சை, வாழைப்பழம் போன்ற அழுகும் பொருட்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி நமது ஏற்றுமதி நிலையை மாற்றி அமைப்பது, வேளாண் ஏற்றுமதி கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும். புதிய, உள்நாட்டுத் தன்மை உடைய, இயற்கையான, நெறிமுறை சார்ந்த, பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் அல்லாத வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வது… தூய்மைப்பிரச்சினை மற்றும் பிற தடைகளை அகற்றி எளிதாக சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கு நிறுவன முறையை உருவாக்குவதும், வேளாண் ஏற்றுமதி கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம், அசாம், நாகலாந்து ஆகிய 8 மாநிலங்கள் வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கான செயல் திட்டங்களை, இறுதி செய்திருப்பதாக, மத்திய அரசின், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எஞ்சிய மாநிலங்கள், வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கான செயல் திட்டங்களை இறுதி செய்வதற்கு, முந்தைய பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை மாநில அரசுகள் திறம்பட செயல்படுத்த தேவையான உதவிகளை செய்வதில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்,கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வாழைப்பழத்தையும், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கையும், மகாராஷ்டிராவிலிருந்து, மாதுளம்பழம், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்டவற்றையும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வுகள் முடிவடைந்து, மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE-Polimer