திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மன்னார்குடி நகராட்சியில் 3வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருக்கிறார். வெற்றிலை, சீவல் உள்ளிட்ட பொருள்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கின்ற கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மன்னார்குடி போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது ஆவிக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றி சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சிவசங்கரிடமிருந்து குட்கா வாங்கி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். சிவசங்கர் தி.மு.க கவுன்சிலர் என்பதால் மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜிடம் இது குறித்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, போலீஸ் டீமுடன் அவரும் சென்று சிவசங்கர் வீட்டில் ஆய்வு செய்துள்ளார்.
இதில் 140 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா மற்றும் அவை விற்பனை செய்த பணம் ரூ. 4 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு 1 லட்சத்து 37,000 இருக்கும் என போலீஸார் கணக்கிட்டனர். இதனை தொடர்ந்து சிவசங்கர் மற்றும் சேகர் இருவரையும் கைது செய்து மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மன்னார்குடி தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.