2024 பார்லிமென்ட் தேர்தலில் மோடிக்கு எதிராக ராகுல்காந்தியை வேட்பாளராக நிறுத்தினால், மோடி ஊதித் தள்ளிவிடுவார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் கலைக் கல்லூரி கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகளும் தொடங்கின. ஆனால், திடீரென அந்த இடம் மாற்றப்பட்டு கல்லூரி கட்டுமானத்துக்கு வேறு இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது, தனியார் குவாரிக்கு ஆதரவாக வேறு இடம் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், கல்லூரி கட்டுமானத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு கையாலாகாத அரசாக உள்ளது என்பதற்கு இதுதான் உதாரணம். கல்லூரி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து கட்டடப் பணிகளை தொடங்கி விட்டு, தற்போது தனியார் குவாரிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. கட்டடம் கட்ட துவங்கப்பட்ட பழைய இடத்திலேயே கல்லூரி கட்டப்பட வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அதேபோல, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நடைபெறும் அறுவை சிகிச்சையை நேரலை செய்தால்தான், உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது தெரியும். உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள்.
பார்லிமென்ட் தேர்தல் அடுத்த மே மாதத்தில் அல்ல, வரக்கூடிய டிசம்பர் மாதம் கூட நடைபெறலாம். ஒரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்துவார். 2024 தேர்தலில் மோடியை வீழ்த்த மாநில கட்சிகள் வலுப்பெற வேண்டும். தேர்தலுக்குப் பிறகு யார் அதிக இடங்களை பெறுகிறார்களோ, அவர்கள் தலைமையில் கூட்டாட்சி நடத்தும் விதமாக பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்து மோடிக்கு எதிராக ராகுலை நிறுத்தினால், மோடி ஊதித் தள்ளி விடுவார்” என்று கூறியிருக்கிறார்.