முதல் நாளிலே 22 பேர் வேட்பு மனு தாக்கல் !

முதல் நாளிலே 22 பேர் வேட்பு மனு தாக்கல் !

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நேற்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. சுயேச்சைகள், சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில் நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 20 ஆண்கள், 2 பெண்கள் என 22 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை வடசென்னை, மத்திய சென்னையில் தலா 2 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக வேலூரில் 3 பேர் வேட்பு மனுக்களை வழங்கியுள்ளனர். வரும் 27-ம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி சனி, 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் வேட்புமனுத்தாக்கல் இல்லை.

28-ல் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். மார்ச் 30 மாலை 3 மணிவரை திரும்ப பெற அவகாசம் உள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து ஏப்.19- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது: முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதில் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேசம் (2), அசாம் (5), பிஹார் (4), சத்தீஸ்கர் (1), மத்தியபிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தராகண்ட் (5), மேற்கு வங்கம் (3) ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (1), ஜம்மு காஷ்மீர் (1) லட்சத்தீவுகள் (1), புதுச்சேரி (1) ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற மார்ச் 20-ம் தேதி கடைசி நாளாகும். பிஹாரில் மட்டும் பண்டிகை காரணமாக வேட்புமனு தாக்கல் மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் வேட்புமனுக்கள் மார்ச் 30-ல் பரிசீலிக்கப்பட உள்ளன வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 2 கடைசி நாளாகும்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *