மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்!
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே கட்டமாக, 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி, தேர்தல் நடந்தது.
நேரடித் தேர்தல்கள் நடைபெற்ற பதவி இடங்கள் :
– 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட, 1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள்,
– 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட, 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள்,
– 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட, 7,621 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள்…
என மொத்தமாக 12,838 பதவி இடங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் பட்டனர்.
தேர்தலுக்காக அமைக்கப் பட்ட வாக்குச் சாவடிகள் :
மாநகராட்சிகளில் – 15,158
நகராட்சிகளில் – 7,417
பேரூராட்சிகளில் – 8,454
என மொத்தமாக 31,029 வாக்குச் சாவடிகளில், வாக்குப் பதிவுகள் நடைபெற்றன.
சென்னை மாநகராட்சியில் மட்டுமே 5 ஆயிரத்து, 794 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டன.
வாக்காளர்கள் எண்ணிக்கை :
ஆண் – 1,37,06,793
பெண் – 1,42,45,637
மூன்றாம் பாலினத்தவர் – 4,324
என மொத்தமாக 2 கோடியே, 79 லட்சத்து, 56 ஆயிரத்து, 754 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.
தேர்தல் அலுவலர்கள் :
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் – 649
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் – 1644 என நியமனம் செய்யப் பட்டு உள்ளனர்.
இந்தத் தேர்தலுக்காக, 80 ஆயிரம் காவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
ஓரு வாக்குச் சாவடிக்கு, 4 வாக்குப் பதிவு அலுவலர்கள் வீதம், மொத்தம் 1.33 லட்சம் அலுவலர்கள், வாக்குப் பதிவு பணியில் ஈடுபட்டனர்.
மந்தமான வாக்குப்பதிவு :
21 மாநகராட்சிகளின் மொத்த வாக்குப் பதிவு, வெறும் 52.22 சதவீதமே. அதிலும் அதிகபட்சமாக, கரூர் மாநகராட்சியில் – 75.84%,
மிகவும் குறைந்தபட்சமாக, சென்னையில் வெறும் 43.62%.
138 நகராட்சிகளின் மொத்த வாக்கு பதிவு – 68.22%.
அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் – 81.37%,
குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் – 59.98% பதிவாகின.
489 பேரூராட்சிகளின் மொத்த வாக்குப் பதிவில்,
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக – 86.43%,
குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் – 66.29% பதிவாகியது
இந்தத் தேர்தலில், தமிழகத்தின் மொத்தமாக வாக்குப் பதிவு 60.70% மட்டுமே. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள “கடம்பூர்” பேரூராட்சியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திமுக மற்றும் அதன் 12 தோழமைக் கட்சி என 13 கட்சிகளின் கூட்டணி ஒரு புறமும், அதிமுக கூட்டணி கட்சிகள் ஒரு புறமும், பாஜக போன்ற கட்சிகள் தனியாக ஒரு புறம் என பல கட்சிகள் போட்டி போட்டனர்.
கட்சிகள் பெற்ற வாக்குகளின் சதவீதம் :
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக, அதிமுகவிற்கு அடுத்ததாக பாஜகவே அதிகப் படியான வாக்குகளை பெற்று உள்ளது. தமிழகத்தின் மொத்த பாஜக வாக்கு சதவீதம் – 5.41%.
மாநகராட்சியில் 7.17 சதவீதமும்,
பேரூராட்சியில் 4.30 சதவீதமும்,
நகராட்சியில் 3.31 சதவீதம், வாக்குகளை பாஜக பெற்று உள்ளது.
மூன்றாவது இடம் யாருக்கு? :
சென்னையில் 19 வார்டுகளில், பாஜக இரண்டாவது இடத்தை பெற்று உள்ளது. மேலும் ஒரு வார்டில், வெற்றியும் பெற்று உள்ளது. துறைமுகம் தொகுதியில் மட்டுமே உள்ள வார்டு எண் – 54, 55, 56, 57, 58 என ஐந்து வார்டுகளில், பாஜக இரண்டாவது இடத்தை அடைந்து உள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 100 வார்டுகளில், 11 வார்டில் பாஜக இரண்டாவது இடமும், 51 வார்டுகளில் மூன்றாவது இடத்தையும் பெற்றது. ஒரு வார்டில் அங்கு, பாஜக வெற்றி பெற்றது.
கோவையிலும், பாஜக நல்ல சதவீதத்தை வாங்கியது. 13 வார்டுகளில், அதிமுக – திமுக இடையே இருந்த வாக்கு வித்தியாசத்தை விட, அதிகமான வாக்குகளை பாஜக வாங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில், 12 வார்டுகளை, பாஜக கைப்பற்றியது. அதிமுக, திமுகவைச் சேர்ந்த ஒருவர் கூட, அங்கு வெற்றி பெறவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில், சுயேச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர் குமார் என்பவர், பாஜகவில் இணைந்தார்.
அதிகமான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், பாஜகவே மூன்றாவது பெரிய கட்சி என்பது நிரூபணமாகி உள்ளது.
முறைகேடு என குற்றச்சாட்டு:
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்தது போலவே, ஆளும் கட்சியினர் அமோக வெற்றி பெற்று இருந்தாலும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது என பத்திரிகைகளில் செய்திகள் வந்ததையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கோவையில் 38 வது வார்டில், ஒரு வாக்கு பெற, 40 ஆயிரம் ரூபாய் வரை, செலவு செய்யப் பட்டதாக, பத்திரிகையில் தகவல் வந்தது. பலர் ஓட்டுப் போட்டு வந்தவுடன், அந்தப் பணத்தைக் கொண்டு, தங்களுடைய குடும்பத்தினருடன், வெளியூர்களுக்கு சுற்றுலா சென்றதாகவும், செய்திகள் வந்தன.
கோவையில் உள்ள 38 வது வார்டில் மட்டுமே, 75 கோடி ரூபாய்க்கு, பணத்தை வாரி இறைத்தாகவும், செய்திகள் வந்தன.
நாடு முழுவதும் அறிந்த முகமான, மத்திய இணை அமைச்சர் திரு L முருகன் அவர்களின் ஓட்டை, வேறொருவர் போட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
வளர்ச்சிப் பாதையில் பாஜக :
கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகி, வெறும் 15 நாட்களில் பிரச்சாரம் செய்து, இந்தளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்குகளை பெற்று உள்ளார்கள், பாஜகவினர்.
வெகு நாட்களாகவே மாற்றத்தை எதிர் பார்த்து, மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். மத்திய அரசின் பல நல்லத் திட்டங்கள், நேரடியாகவே மக்களை சென்று அடைந்து உள்ளதால், மக்களின் மனநிலையும் மாறி உள்ளது.
அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் மட்டுமே வாக்குகளை பெற முடியும் என்ற எண்ணம் மாறி, மக்கள் நலப் பணியால் கூட, வாக்குகளை பெற முடியும் என்பதை சமீப காலமாக, தனது பிரச்சார யுக்திகள் மூலம் பாஜக உணர்த்தி வருகின்றது. நடைபெற்ற தேர்தலில் பலர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியது, எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியது.
சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்கள் கூட, பாஜக வால் கவரப்பட்டு, கட்சியில் இணைந்து இருக்கின்றனர் என்பதன் மூலம், எந்தளவுக்கு பாஜக மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்பது நன்கு புலப்படுகின்றது.
எல்லா எதிர் கட்சியினருமே பாஜகவின் வெற்றியை குறி வைத்து பேசி வருவதன் மூலமாக, பாஜகவின் வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதை, நம்மால் உணர முடிகின்றது.
குளத்தில் ஒரு தாமரைப் பூவின் விதையைத் தூவினால், அந்த குளம் முழுவதிலுமே தாமரைப் பூ மலர்ந்து விடும். அதனை மனதில் வைத்தே, 308 இடங்களைப் பிடித்த பாஜக, வருங்காலத்தில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விடுமோ? என்ற எண்ணத்தில், எதிர் கட்சியினர் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறி வருவதாக, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
Good analysis, keep it up, All the best