தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரின் ₹60,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு – முதல்வரின் மெளனம் ஏன் ?

தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரின் ₹60,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு – முதல்வரின் மெளனம் ஏன் ?

Share it if you like it

சமீபத்தில் தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு.குடியாத்தம் குமரன் திமுக அமைச்சர் துரைமுருகன் மணல் கடத்தலில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளதாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு.குடியாத்தம் குமரன் அவர்களின் வீடியோ ஒன்று பார்க்க நேர்ந்தது. அந்த வீடியோவில் மாண்புமிகு அமைச்சர் திரு.துரைமுருகன் மற்றும், அவரது மகன் திரு.கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோர் குறித்து, திரு.குடியாத்தம் குமரன் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

அதாவது, நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், துறையின் கீழ் வரும் மணல் விற்பனையில் முறைகேட்டின் மூலமாக ₹60,000 கோடி ஊழல் செய்துள்ளதாக கூறிய விவகாரம், தமிழக மக்களிடம் ‘திருட்டு மாடல்’ அரசின் லட்சணத்தை மீண்டும் மீண்டும் தோலுறித்து காட்டியிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மணல் மாஃபியாக்கள் அதிகம் புழங்கும் மணல் குவாரிகளில், ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர் புகார்கள் எழுந்தன. அதை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதோடு, எந்த அளவிற்கு மண் எடுக்கப்பட்டிருக்கிறது என ஐஐடி குழுவினர் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடனும் அளவீட்டனர்.

இவ்வாறு முறைக்கேடாக மண் எடுக்கப்பட்டதன் காரணமாக மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வரவேண்டிய ஜிஎஸ்டி வருவாயில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அளவுக்கு அதிகமாக அள்ளியது மற்றும் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை தமிழகத்தில் தற்போது பணியில் இருக்கும் பத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வருகின்றன. இதுமட்டுமின்றி தமிழக நீர்வளத் துறையின் முதன்மை பொறியாளர் திரு.முத்தையா, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி அன்று மணல் முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைமுன்பு விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

மணல் ரெய்டுகள் நடந்தது முதல் தொடர் விடுப்பில், அதுவும் நீண்ட விடுப்பில் இருந்த முதன்மை பொறியாளர் திரு.முத்தையா, அமலாக்க துறையின் அதிரடி நடவடிக்கையால்தான் ஆவணங்களுடன் ஆஜராகி உள்ளார் என தெரிகிறது. என்ன நடக்கிறது தமிழகத்தில்..? மணல் விவகாரத்தில் ஒருபுறம் தி.மு.க-வின் துணை கொள்கை பரப்புச் செயலாளரே ₹ 60,000 கோடி அமைச்சர் திரு.துரைமுருகன் ஊழல் செய்து விட்டார் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். மறுபுறம், அமைச்சர் திரு.துரைமுருகன் கைவசம் வைத்திருக்கும் நீர்வளத் துறையின், முதன்மை பொறியாளர் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை பலரையும்
அமலாக்க துறை சுற்றி வளைத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மணல் மோசடிகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த
வண்ணமாகவும், இதில் என்ன நடக்கிறது என மக்கள் கேள்விகள் அடுக்கும் நிலையிலும்…
தமிழக அரசின் மவுனம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தனது தாத்தா காலத்தில் சம்பாதிக்காத அளவு பணத்தை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ₹30,000 கோடி, முதல்வர் மகன் திரு.உதயநிதியும், முதல்வர் மருமகன் திரு.சபரிசனும் சம்பாதித்து விட்டனர் என முன்னாள் நிதி அமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல்
தியாகராஜன் கூறியதன் காரணமாக அவரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றிய
தி.மு.க அரசு, இந்த ₹60,000 கோடி மணல் விவகாரத்தில் விளக்கம் அளிக்காமல் இருப்பது
ஏன்? தி.மு.க அரசை மணல் விவகாரத்தில் பேச விடாமல் எது தடுக்கிறது? மக்களின் வரிப்பணம்
சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது? என வெள்ளை அறிக்கை வேண்டும்.
மக்களுக்காக இதைக் கேட்கிறோம்… தர முடியுமா ‘திருட்டு மாடல்’ அரசே?


Share it if you like it