6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி… திராவிட மாடல் பாடத்திட்டம்!

6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி… திராவிட மாடல் பாடத்திட்டம்!

Share it if you like it

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் மூன்றாம் பருவத்துக்கான கணிதப் பாடத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் விவகாரம் கல்வியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாகவே, சூதாட்டம் என்பது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டு வருகிறது. ஏனெனில், அப்பாவி ஏழை, எளிய மக்களின் குடும்பங்களை சிதைப்பதில் லாட்டரி சீட்டும், சூதாட்டமும், மதுவும்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில், லாட்டரி சீட்டுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை விதித்து விட்டார். அதேபோல, சூதாட்டமும் தடை செய்யப்பட்டதாகவே இருந்தது. நகருக்கு மத்தியில் இருந்து பல்வேறு சூதாட்ட கிளப்புகள் ஜெயலலிதா ஆட்சியில் மூடப்பட்டன. இதைப் போன்றே மதுவும் ஒழித்துவிட வேண்டும் என்று கருதினார். ஆனால், அதற்குள் துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில்தான், தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், டாஸ்மாக் மதுபானம் ஒருபுறம் அப்பாவி ஏழைகளின் உயிரை குடித்துக் கொண்டிருக்க, ஆன்லைன் சூதாட்டமும் பட்டையைக் கிளப்புகிறது. இதற்காக, பல்வேறு செயலிகள் வந்து விட்டது. மேலும், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்கள் தோன்றி, சூதாட்டத்தை ஊக்குவிக்கின்றனர். இதில், ஹைலைட் என்னவென்றால், அந்த செயலிகளில் கூட 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் விளையாடுங்கள் என்று அறிவிப்பு செய்கிறார்கள்.

எனினும், ஆன்லைன் சூதாட்டத்தால் உயிர் பலிகள் அதிகரிக்கவே, தடை கொண்டுவரப்பட்டது. எனினும், தடையை உடைத்து தற்போது மீண்டும் உயிர் குடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டு விளையாடு எப்படி என்று மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை வைத்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கத் துணிந்திருக்கிறது. அதாவது, 6-ம் வகுப்பு கணித பாடத்திட்டத்தின் மூன்றாம் பருவத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் முழு எண்களை விளக்கும் உதாரணத்திற்காக ரம்மி விளையாடுவது எப்படி என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு மாணவர்களை ரம்மி விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆனால், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையோ, மாணவர்களுக்கு எண்கள் குறித்து தெளிவாக விளக்கவே கணிதப் புத்தகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக சப்பைக்கட்டு கட்டுகிறது. அதேசமயம், இதனை படிக்கும் மாணவர்கள் வீட்டில் படிப்பார்களா? அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட நினைப்பார்களா? என்பதுதான் கேள்வி. மற்ற மாநிலங்களில் வேறு பொருட்களை உதாரணமாக வைத்து பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ரம்மி விளையாட்டை வைத்து பாடத்திட்டம் எப்படி தயாரிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆகவே, கல்வியாளர்களும், பெற்றோர்களும் சீட்டு பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பெண்களின் இடுப்பு பற்றி ஆராய்ச்சி நடத்திய லியோனியையும், திருமணம் கடந்த உறவு என்கிற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த சுப.வீரபாண்டியனையும் வைத்திருந்தால் பாடத்திட்டத்தின் லட்சணம் இப்படித்தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்கள். மேலும், சிலர் ஓகோ இதுதான் திராவிட மாடல் பாடத்திட்டமோ என்றும் நக்கல் செய்து வருகின்றனர்.


Share it if you like it