75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையத்துக்கு கொடிகாத்த குமரன் பெயரை சூட்டி கவுரப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு.
நம் பாரத நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் பங்கு மிகவும் முக்கியமானது. 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டபோது, திருப்பூரில் ஜனவரி 10-ம் தேதி கையில் தேசியக் கொடியை ஏந்தி தேசபந்து இளைஞர் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் திருப்பூர் குமரன். அப்போது, போலீஸார் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையிலும், தேசியக் கொடி கீழே விழுந்து விடாமல் பாதுகாத்தவர் குமரன். எனினும், போலீஸாரின் முரட்டுத்தனமாக தாக்குதலில் பலத்த காயமடைந்த இவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 11-ம் தேதி உயிரிழந்தார்.
குமரன் மறைந்து விட்டாலும், தேசியக் கொடி கீழே விழாமல் பாதுகாத்ததால், கொடிகாத்த குமரன் என்று இன்று வரை அன்போடு அழைக்கப்படுகிறார். மேலும், திருப்பூரில் குமரனுக்கு சிலை அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், திருப்பூரின் அடையாளமாக விளங்கும், குமரனின் 100-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு இந்திய அரசால் சிறப்பு நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது. அப்போது, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரனின் பெயரை சூட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தினவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் தற்காலிகமாக சூட்டப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்வரும் சனிக்கிழமை வரை வைக்கப்பட்டிருக்கும். மேலும், திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில், ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்படக் கண்காட்சி மற்றும் செல்பி பூத் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய செயல் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.