தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், 8 மாநிலங்களில் 76 இடங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்தாண்டு தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்வது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் நகரில் ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில், பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்தான், நேற்று நாடு முழுவதும் 76 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 8 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல இடங்களில் ஆயுதங்கள் சிக்கி இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆயுதங்களை வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப்பில் மட்டும் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திதாமில் உள்ள கேங்க்ஸ்டர் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் குல்விந்தர் இருக்கும் பகுதிகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குல்விந்தர், நீண்ட நாட்களாக பிஷ்னோயுடன் தொடர்பில் இருந்தவர். அவர் மீது பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக வழக்கு இருக்கிறது. ஆகவே, குல்விந்தருக்கும் சர்வதேச போதைப் பொருள் கூட்டமைப்புடன் தொடர்பு இருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சமூக விரோத மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்தும் 4-வது சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.