1946-ம் வருடம் ஜூன் 4 அன்று ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தார். இதுவரை 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தியவர். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்தது.
51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இத்தகவலை அவருடைய மகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் எஸ்.பி.பி.யின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.