பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள் எண் – 972)
பொருள்: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே. ஆயினும், செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், சிறப்பு இயல்பு ஒத்து இருப்பது இல்லை.
பல அவதாரங்கள் எடுத்த சிவனும், விஷ்ணுவும் பல்வேறு சமுதாயத்தில் பிறந்து, அந்த சமுதாயத்தின் வழக்கப்படி வளர்ந்து, தங்களின் திருவிளையாடல்களை, நிகழ்த்தி இருக்கின்றனர். விஷ்ணுவின் அவதாரங்களில், ஒவ்வொரு அவதாரமும், ஒரு படிப்பினையை, சமுதாயத்திற்கு கொடுத்து உள்ளது.
திருமாலின் அவதாரங்கள்:
ஆமை வடிவத்தில் கூர்ம அவதாரம்,
பன்றி வடிவத்தில் வராக அவதாரம்,
மனித உடலும், சிங்கத்தின் தலையும் கொண்ட உருவத்தில் நரசிம்ம அவதாரம்,
குள்ளமான மனித வடிவத்தில் வாமன அவதாரம்,
மனித உருவத்தில் பரசுராமர், ராமர், பலராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரம்.
இதில், ராமர் சத்ரியர் ஆகவும், கிருஷ்ணர் யாதவர் ஆகவும்,
பலராமர் விவசாயி ஆகவும், வாமனர் மற்றும் பரசுராமர் பார்ப்பனர் ஆகவும் என அனைத்துச் சமுதாயத்திலும், இறைவன் பிறந்து, அந்த சமுதாயத்தின் படி வாழ்ந்து, வளர்ந்தனர்.
அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக கோவில்களில் நாம் காணலாம். இதன் மூலம், நமது சமுதாயத்தில், அனைவரும், ஏற்றத்தாழ்வு என்பதே இல்லாமல், எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தனர் என்பது நமக்கு நன்கு புலப்படும்.
அந்நியர்களின் படை எடுப்பால், நமக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, நம்மை அடிமைப் படுத்தி, நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, நமக்கு உள்ளேயே மிகப் பெரிய இடைவெளியை, அந்நியர்கள் ஏற்படுத்தி விட்டனர். காலப் போக்கில், அதனை சரி செய்ய, பல்வேறு நபர்கள், சமூக சீர்திருத்தத்திற்காக, தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அவர்களில் சிலரைப் பற்றி அறிவோம்…
சுவாமி சகஜானந்தர் :
முனுசாமி என்பது இயற்பெயர். பள்ளியில், பைபிளை ஒப்பிப்பதில் கிறிஸ்தவ மாணவர்களை விட, அதிக ஆற்றல் பெற்று இருந்தார். அவரை, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுமாறும், கிறிஸ்துவத்தை தழுவுமாறும், வற்புறுத்தினர், அதனை ஏற்க, மறுத்து விட்டார்.
கிறிஸ்தவ மதத்தில் சேர மறுத்ததால், அவருக்காக, 1903 ஆம் ஆண்டில் செலவு செய்த தொகையை, கிறிஸ்தவப் பள்ளி திருப்பிக் கேட்டது. மேலும், அவர் விடுதியில் தங்கிப் படித்ததால், அறை மற்றும் உணவுத் தொகை என 60 ரூபாயை, அவரது தந்தையிடம் வசூலித்தனர்.
வ.உ.சி.யிடம், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். விசார சாகரம், மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கைவல்ய நவநீதம் மற்றும் கம்ப ராமாயணம் போன்ற நூல்களை, ஆழமாகப் படித்தார். சமஸ்கிருதம் பயின்றார். அதன் பிறகு, ஞான வாசிஷ்டம், பகவத் கீதை, வால்மீகி இராமாயணம் மற்றும் பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
பட்டியலின மக்களுக்காக, 1916 ல் “நந்தனார் மடமும், நந்தனார் கல்விக் கழகமும்” ஆரம்பித்தார். ஆரம்பிக்க, பல்வேறு சமுதாய மக்களும் உதவினர்.
பள்ளியில், கடுமையான ஒழுக்க விதிகள் கடைபிடிக்கப் பட்டன. மாணவர்கள், காலையில் நீதி போதனை வகுப்பில், கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும், கட்டாயம் விபூதி அணிய வேண்டும், தினமும் தேவாரம் போதிக்கப் பட்டன.
பட்டியலின மக்கள், இந்துக்களே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டு இருந்தார். அவர்களை ‘ஆதி திராவிடர்’ எனக் கூறாமல் ‘ஆதி இந்துக்கள்’ என்று அழைக்க வேண்டும் எனக் கோரினார்.
மதுரை வைத்தியநாத ஐயர் :
1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மதுரையில், ஆலயப் பிரவேச மாநாடு நடைபெற்றது. அப்போது “ஆலயப் பிரவேசம் நடத்தியே தீருவோம்” என வைத்தியநாத ஐயர் முழங்கினார். இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் முழுவதும், மதுரை எங்கும், ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாகக் கூட்டங்கள் நடந்தன.
1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் நாள், பட்டியலின மக்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு, மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், அனைவருக்கும் மரியாதை செய்யப் பட்டு, கருவறைக்கு அழைத்துச் செல்லப் பட்டு, வழிபாடு நடந்தது.
அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல் மந்திரி மூதறிஞர் இராஜாஜி, அவசரச் சட்டம் ஒன்றை கவர்னர் மூலமாகப் பிறப்பித்தார். பின்னர், சட்டமன்றம் கூடியவுடன், செப்டம்பர் மாதம் 1939 ஆம் ஆண்டு, அதனை, சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றி, ஆலயப் பிரவேசத்தினை சட்ட பூர்வமாக அங்கீகரித்தார்.
மீனாட்சி அம்மன் ஆலயத்தைத் தொடர்ந்து, அழகர் கோயில், திருப்பரங்குன்றம், ஸ்ரீ ரங்கம், பழனி, ஸ்ரீ வில்லிப்புத்தூர் போன்ற தமிழகத்தின் முக்கிய தலங்கள் அனைத்திலும், 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், ஆலயப் பிரவேசம் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்தேற வைத்தியநாத ஐயருக்கு, இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் உறுதுணையாக இருந்தனர்.
வ.உ.சிதம்பரனார் :
சுதந்திர வேட்கையை மக்களிடையே ஊட்டும் வகையில், பல்வேறு பொதுக் கூட்டங்களில், வ.உ.சி. பேசினார். அதன் பலனாக, பல்வேறு சமுதாயத்தினரும் இணைந்து, ஒரு திட்டத்தை செயல் படுத்தினார்கள். அதன் படி, ஆங்கிலேயர்களின் ஆடைகள் உடுத்தும் நபர்களுக்கு, அன்னிய கம்பெனிக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு, பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும் தேச துரோகிகளுக்கு, “அம்பட்டர் யாரும் சவரம் செய்ய மாட்டார்” எனவும், “வண்ணார் எவரும் துணி வெளுக்க மாட்டார்” எனவும், “கடைக்காரர் எவரும் பொருட்கள் தர மாட்டார்” எனவும், “வண்டிக்காரர் எவரும் அவர்களுக்கு வண்டி ஓட்ட மாட்டார்” எனவும், வ.உ.சி. யின் அறை கூவலை ஏற்று, அனைத்து சமுதாயத்தினரும், சுதந்திர வேள்வியில் ஈடுபட்டு, தங்களால் முடிந்ததை செய்தனர்.
அவ்வாறு, வ.உ.சி. அவர்கள், சுதந்திரத் தீயை மூட்டி, சமுதாய நல்லிணக்கத்தை, மக்களிடையே ஏற்படுத்தி வைத்து இருந்தார்.
இவர்களைப் போலவே, அனைத்து சமுதாயத்தினரின் வளர்ச்சிக்காக பாடுபட்ட, மகாகவி சுப்ரமணிய பாரதியார்,
1886 ஆம் ஆண்டில், சைவ – வைணவர்களின் ஒற்றுமைக்காக, சங்கத்தை ஏற்படுத்தி, பெரும் செல்வந்தராக விளங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த மதுரைப் பிள்ளை,
மத மாற்றத்தை மிகக் கடுமையாக எதிர்த்த எம்.சி. ராஜா, இரட்டை மலை சீனிவாசன்,
பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டதால், “ஹரிஜன ஐயங்கார்” என அழைக்கப்பட்ட, P.S. கிருஷ்ணசாமி அய்யங்கார்,
என பல தமிழர்கள், சமுதாய நல்லிணக்கத்திற்காக, ஆங்கிலேயர்களை எதிர்த்தும் பாடுபட்டனர்.
சமீபத்தில் தமிழக அரசு, “சமூக நீதி நாள்” என ஒரு நாளை, அறிவித்து இருக்கின்றது. மேலும், “சென்னை பல்கலைக்கழகம்”, “சமூக நீதி” என்ற பாடத் திட்டம், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப் படுத்தி, இளங்கலை மாணவர்கள், “சமூக நீதி” என்ற பாடத்தை, விருப்பப் பாடமாக எடுத்து படிக்கலாம் எனவும், பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்து இருக்கின்றார்.
அந்த பாடத்திட்டத்தில், எண்ணற்ற தியாகங்களை செய்த, பல சமூக சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கை சம்பவங்கள், இடம் பெற வேண்டும். அதன் மூலம், சமுதாய சீர்திருத்தத்திற்கு, ஒருவர் மட்டுமே உரிமை கொண்டாடாமல், அனைவரும் சமூக நல்லிணக்கத்திற்காக, என்னென்ன பாடு பட்டார்கள், என்பது அனைத்து மக்களுக்கும் தெரிய வரும்.
பலரின் தியாகத்தால் ஏற்பட்டு இருக்கும் சமூக நல்லிணக்கத்தை, வெகு சிலர் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. போராடிய அனைவரின் தியாகங்களும், நினைவில் கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் விழா நடத்தி, அவர்களுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் கோரிக்கையாகும்…
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
உதவியவை:
https://www.tamilhindu.com/2012/11/voice-of-an-oppressed-hindu-sahajanandar/
http://www.maduraiavaidyanathaiyer.com/site_en.htm
https://swarajyamag.com/culture/the-forgotten-gems-of-tamil-nadu
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் – கே.ஜீவபாரதி