வீர திருமகனின் தியாக சரித்திரம் | சுதந்திரம்75

வீர திருமகனின் தியாக சரித்திரம் | சுதந்திரம்75

Share it if you like it

வீரபாண்டிய கட்டபொம்மன்

https://youtu.be/Waug71eUjp0

கும்பினியாரின் மேல் மிக வெறுப்பு கொண்டவர் கட்டபொம்முவின் தகப்பனார். அவர் வழி வந்த கட்டபொம்மு மட்டும் எப்படி அவர்களோடு அன்பு பாராட்டுவார்? அதற்குக் காரணம் கும்பினியார் கட்டபொம்முவை வரி செலுத்தும் படியாகக் கூறியும் மற்றும் பல தொந்தரவுகளையும் இழைத்து வந்ததேயாகும். கட்டபொம்மு அடிமையாக வரி கட்டி வாழ்வதை வெறுத்தார். வரிக்கட்டும் படி கும்பினியார் கட்டளை இட்டனர். கட்டபொம்மு அதற்கு மறுப்பளித்தார். அன்னியரது ஆணவமான கட்டளையை எண்ணி உள்ளம் துடி துடித்தார்.

என்ன அநீதி! எங்கேயோ இருந்து வந்த இவர்கள், நம்மை வரி கேட்க என்ன உரிமை இருக்கிறது. பிறந்த நாட்டிலே சயேச்சையாக வாழ உரிமையில்லையா? அன்னியர் நம்மை அடக்கி ஆள்வதா? நாம் அதற்கு அடி பணிவதா? தன்மான மனிதன் எவனும், அன்னிய ஆட்சிக்கு பணிந்து கிடக்க மாட்டான் என்றெண்ணிய கட்டபொம்மு, தம்மை வரி கேட்ட கும்பினி ஆட்சிக்கு, வானம் பொழியுது, பூமி விளையுது – மன்னவன் காணிக்கு எது கிஸ்தி? என்ற கேள்வியை விடுத்தார்.

கும்பினி ஆட்சியின் வஞ்சம் இதனால் கட்டபொம்முவின் மேல் அதிகரித்தது. கட்ட பொம்முவை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என, ஜாக்ஸன் சூழ்ச்சி செய்தார். எப்படியெனில், இராமநாதபுரத்திற்கு அழைத்து, தனியாக இருக்கும் போது கைது செய்ய வேண்டும் என்றெண்ணினர். உடனே எண்ணற்ற கடிதங்கள் பறந்தன. ஆனால் கட்டபொம்மு அவற்றையெல்லாம் அசட்டை செய்து வந்தார்.

இருப்பினும், கடைசியில் போவதென தீர்மானம் செய்த பிறகு, தன் வீரர்களுடன் கட்டபொம்மு புறப்பட்டார். ஜாக்ஸன் என்பவருடன் நடந்த பேச்சு வார்த்தையில், வரி விஷயங்களைப் பற்றியும், தாம் எழுதிய கடிதங்களைப் பற்றியும் பேச்சு நடக்கும் போது, கட்ட பொம்மு உள்ளம் கொதித்தார். தான் வெளியே சென்று விட்டு வருவதாகச் சொல்லி, வெளியே வந்தார்.

வெளியே முன்னேற்பாடாக வைக்கப்பட்டிருந்த கட்டபொம்முவின் சிறு படை, கோட்டையைத் தாக்கிற்று. கும்பினிப் படையும் எதிரிகளை தாக்கியது. இரு படைகளிலும் பலர் மாண்டனர். இரு படைகளும் வீரப் போரிட்டன. கட்ட பொம்மு அந்தப் போரிலே தன் வீரத்தைக் காட்டினார். கடைசியில் தப்பிச் சென்று விட்டார். உடன் அவனுடைய தம்பி ஊமைத்துரையும் இருந்தார்.

புதுக்கோட்டை மன்னர் தன் நண்பன் கட்டபொம்முவை அன்புடன் வரவேற்றார். கட்டபொம்மு புதுக்கோட்டையில் இருப்பதை அறிந்த கும்பினியார், பிடித்துத் தரும்படி, பல கடிதங்களை புதுக்கோட்டை மன்னனுக்கு எழுதினர். கட்ட பொம்முவுக்கும், ஊமைத் துரைக்கும் உண்ண விருந்தளித்து, உறங்கச் செய்து, அவர்கள் உறங்கும் சமயம் கும்பினிப் படையை ஏவினர்.

கைது செய்யப்பட்ட கட்ட பொம்மு விசாரனைக்குப் பின், தூக்குத் தண்டனையைப் பெற்றார். தேசத் தொண்டு செய்த கட்டபொம்மு தூக்குத் தண்டனைப் பெற செய்தக் குற்றங்கள் தான் என்ன? அன்னியருக்கு அடியிட்டு கிஸ்தி செலுத்தவில்லை, அவர்களுக்கு இன்னல்கள் இழைத்தார், கலெக்டர் துரையை சாதாரன முறையில் பார்க்க மறுத்து விட்டார், கும்பினியரின் எதிரிகளுக்கு உதவி செய்து, அவர்களோடு சேர்த்து கொண்டு போரிட்டு, கும்பினியாரைக் கொன்றார். இவைகள் தான், சுமத்தப் பட்ட குற்றங்களாகும்.

இதில் ஒன்று கவனிக்க வேண்டும், அதாவது மேற்குறித்த குற்றங்களை எவர் சாற்றினாரோ, அந்த மேஜர் பானர்மனே நீதிபதியாய் தீர்ப்பளித்தது தான், உலகத்திலேயே காண முடியாத விசித்திரம்.

வீரன் கட்டபொம்மு தூக்கு தண்டனையை வரவேற்று, தேச சேவை செய்வோருக்கு, இது குற்றமே ஆகாது என சொன்னார். தூக்கு மேடை, ஊருக்கு பக்கத்தில், சாலையோரத்தில் இருந்த ஒரு புளிய மரம், அந்த மரம் பெரும் புனிதத் தன்மை வாய்ந்த தொன்றாகும். தூக்கு மேடையை நோக்கி வந்த காட்சி கம்பீரம் வாய்ந்தது, கண்ணீர் வடிக்கத் தக்கது. தூக்கு மேடையை நெருங்கும் சமயம், சிறிது மனக் கலக்கமுற்றார். இனி யார், இந்தக் காரியத்தை தொடர்ந்து செய்யப் போகின்றனர்? திறமை வாய்ந்த ஊமைத் துரையும் உள்ளே அடைபட்டு கிடக்கின்றார் என்றெல்லாம் எண்ணி மனக் கலக்கமுற்றார்.

சண்ட மாருதமே சாடினாலும், சற்றும் சளைக்காத வீரன், அன்று மட்டும் கலங்கியதேன்? மரணத்தை நினைத்தா? இல்லை, இல்லை. சுதந்திர ஆர்வம் படைத்த வீரன், தூக்கிலிடப்பட்டு மாண்டு போவதை நினைத்து வருந்தினார்.

ஆம்! இத்தனை நாள் போரிட்ட வீரனுடைய உள்ளம் எப்படித் துடித்ததோ! சுதந்திரம் வேண்டி சுயநலமற்ற வீரனின் உடல், கயிற்றிலே உயிரற்று ஊசலாடியது. வாளேந்தி நின்ற அவனின் கைகள், தொங்கி விட்டன. அச்சுதந்திர வீரன் தூக்கிலிடப் பட்டது, 1799 ஆம் ஆண்டு, அக்டோபர் 16ம் நாளாகும்.

–        தீபன்


Share it if you like it