சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகளும், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் தம்பி மனைவியுமான அபர்ணா யாதவ் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது உத்தரப்பிரதேச மாநில அரசியலில் அதிரடி திருப்பமாக அமைந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்றத்துக்கான பதவிகாலம் விரைவில் நிறைவடையவுள்ளது. ஆகவே, இம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம்வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களிடமும், கட்சியிலும் கடும் அதிருப்தியை சம்பாதித்திருந்த பா.ஜ.க.வை சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உட்பட பல்வேறு கட்சிகளில் இணைந்தனர். இதனால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு என்பதுபோல சில ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆனால், உண்மையில் பல மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க.வே அமோகமாக வெற்றிபெறும்; மீண்டும் யோகி ஆதித்யநாத்தே முதல்வராவார் என்று தெள்ளத்தெளிவாக தெரியவந்தது.
இந்த நிலையில்தான், சமாஜ்வாதி கட்சியினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அக்கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகளும், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் தம்பி மனைவியுமான அபர்ணா யாதவ், அதிரடியாக பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். அதாவது, முலாயம்சிங் யாதவுக்கு 2 மனைவிகள். இதில் 2-வது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீப் யாதவின் மனைவிதான் இந்த அபர்ணா யாதவ். இவர்தான் டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்திருக்கிறார். இவர் 2017 தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க.வின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வியடைந்தவர். எனினும், என்.ஆர்.சி. விவகாரத்திலும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையும் ஆதரித்தவர் அபர்ணா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அபர்ணா ஏற்கெனவே அரசியல் அனுபவம் உள்ளவர். ஆகவே, அகிலேஷ் யாதவ் தரப்பு ஆட்டம் கண்டிருக்கிறது.