சுபாஷ் சந்திர போஸ்
ஒடிசா மாநிலத்தின் கட்டக் என்ற ஊரில், ஜானகிநாத் போசுக்கும் -பிரபாவதி தேவிக்கும், 23 ஜனவரி 1897 அன்று, மகனாக பிறந்த அந்தக் குழந்தை, பாரத தேசத்தின் செல்ல மகனாக மாறினார். வளர வளர பாரதத்தின் பாதுகாவலனாய், பாரதத் தாயை விலங்கிட்ட ஆங்கிலேயர்களை எதிர்க்கும் வீர புரட்சியாளராய், தேசத்தின் சுதந்திரத்திற்காக, மகா சேனையை உருவாக்கின போர் வீரராய் உருவெடுத்த அந்த குழந்தை தான், “நேதாஜி” (தலைவர்) என்று அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப் படும் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்”.
சுபாஷ் சந்திர போஸின் பெயரை கேட்டாலே, அன்று ஆங்கிலேயர்கள் மட்டும் அதிரவில்லை, இன்றைக்கும் எட்டு திக்கும் அதிருகிறது. சுபாஷ் சந்திர போஸின் உருவப் படத்தை பார்த்தாலே போதும், கோழையாய் உட்காரும் சிறுவனின் இரத்தம் கூட, வேகமாய் ஓடத் துவங்கும்.
முதலாம் உலகப் போரின் போது, செண்பகராமன் பிள்ளை, இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக, அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களைக் கொண்டு, ஒரு அணியை உருவாக்கினார். ஆங்கிலேய படையின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், இராணுவ சீருடை அணிந்த இந்திய தன்னார்வலர்களைக் கொண்டு ‘இந்திய தேசிய தன்னார்வப் படை’ என்ற ஓர் படையை உருவாக்கி, அவர்களுக்குத் தேவையான அனைத்துப் போர் பயிற்சிகளையும் அளித்தார்.
1919 ல், வியன்னா சென்ற போது, சுபாஷ் சந்திரபோஸ், செண்பகராமன் பிள்ளையைச் சந்தித்தார். சுபாஷ் சந்திர போஸ், செண்பகராமன் பிள்ளையின் ‘இந்திய தேசிய தன்னார்வப் படை’யிலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு, பின்னர் அவர் செண்பகராமனின் படையைப் போன்றே, ‘இந்திய தேசிய இராணுவத்தை’ (INA) உருவாக்கி, செண்பகராமன் பிள்ளை அவர் அமைப்புக்கு கொடுத்த அதே “ஜெய் ஹிந்த்” முழக்கத்தை யும், தன்னுடைய ஐ.என்.ஏ.விற்கான முழக்கமாகவும் வைத்தார்.
தேச பக்தியில் மட்டும் சிறந்தவரல்ல, தெய்வ பக்தியிலும் சிறந்தவராக இருந்தார். பகவத் கீதையின் ஒரு புத்தகத்தை எப்பொழுதும் தன்னிடம் வைத்திருந்தார். எங்கே சென்றாலும், கீதையை தன்னோடு எடுத்துச் சென்றார்.
ஒரு பக்கம் கீதையின் வழிகாட்டு இருக்கையில், மறு பக்கம் சுவாமி விவேகானந்தரின் தேசியவாத சிந்தனைகள், அவருக்கு உத்வேகம் அளித்தது.
கல்வி பயிலும் காலத்தில், சிறந்த மாணவனாக இருந்து, 1920 ஆம் ஆண்டு, இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி (ICS) பெற்று, அரசாங்க உத்தியோகத்தை விட்டு விட்டு, சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கினார்.
இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியின் தலைவராக, சிறப்பாக செயல் பட்டு, காங்கிரஸின் தலைவராக தகுதி பெற்றார். ஆனால், காந்தியின் அகிம்சை வழியை, போஸ் ஏற்க மறுத்ததால், காந்தியுடன் கருத்து மோதலின் காரணமாக, காங்கிரஸிலிருந்து விலகினார்.
1921 இல் இருந்து 1941 ஆம் ஆண்டு வரை, 11 முறை சிறைக்கு சென்று வந்த சுபாஷ் சந்திர போஸ், அமைதியான அகிம்சை வழியில் சுதந்திரம் பெற முடியாது என்ற கருத்துடன், 1942 ல் இந்திய வீரர்களை கொண்ட இந்திய தேசிய ராணுவம் (INA) என்ற ஒரு படையை அமைத்தார். அவருடைய ‘ஆசாத் ஹிந்த் பவுஜ்’ (Azad Hind Fauj) உருவெடுக்கத் துவங்கியது. ஆங்கிலேயர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தார், சுபாஷ் சந்திரா போஸும் அவருடைய ‘ஆசாத் ஹிந்த் பவுஜும் ‘.
ஆகஸ்ட் 18, 1945 அன்று விமானத்தில் புறப்பட்டு சென்ற சுபாஷ் சந்திர போஸ், தாய் நாட்டிற்கு திரும்பவில்லை, அவரை பற்றி எந்த தகவலும் வரவில்லை. ஆயினும், இன்றைக்கும் இந்தியர்களின் உள்ளங்களில், சுபாஷ் சந்திர போஸ் வாழ்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில், சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு, மிக மகத்தானதாகும்.
பாரதத் தாயை காப்பதில், சுபாஷ் சந்திர போஸ், இளைஞர்களிடம் பெரும் நம்பிக்கை வைத்தார். சுபாஷ் சந்திர போஸ் என்ற தியாகியின் நம்பிக்கையை, நிலை நாட்டுவோமாக. ஒவ்வொரு இளைஞருக்குள், ஓர் சுபாஷ் சந்திர போஸை உருவாக்குவோமாக.
பாரதத்தை காப்போமாக!
- Dr M. விஜயா
அருமை வாழ்த்துகள்