பாரத பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ட்விட்டரில் அவதூறு பரப்பிய தி.மு.க. எம்.பி.யின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதோடு, அந்த அவதூறு பதிவும் நீக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் அசிங்கப்பட்டிருக்கிறார் எம்.பி. செந்தில்குமார்.
தமிழகத்தில் ஜீ தமிழ் என்கிற தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் சிறுவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 2019-ம் ஆண்டு பிரமதர் மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரமதர் அணியும் உடைகள், அவரது வெளிநாட்டுப் பயணங்கள், தனியார் மயமாக்கல் கொள்கை உள்ளிட்டவை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் ஆகியோர் மேற்கண்ட வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நக்கலாக கமெண்ட்டும் செய்திருந்தனர்.
இதற்கு பா.ஜ.க.வினரும், ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. மேலும், அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களும் மேற்கண்ட வீடியோவை பார்த்து விட்டு முகம் சுளித்தனர். பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தனர். தவிர, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தை தொடர்புகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அதோடு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, மேற்கண்ட நிகழ்ச்சியை தயாரித்த குழுவினர் மீது ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில்தான், ‘சிரித்து சிந்தித்து மகிழ’ என்கிற தலைப்பில் மேற்கண்ட வீடியோவை பதிவு செய்திருந்த தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரின் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. மேலும், பிரதமர் குறித்து அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பதிவையும் நீக்கிவிட்டது. இதன் பிறகே, செந்தில்குமாரின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் அசிங்கப்பட்டிருக்கிறார் தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார்.