எதிர்வரும் 2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி தேசத்தின் விடுதலைக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர். அவரது 125-வது பிறந்தநாளையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கல்லாலான நேதாஜியின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அதன்படி, ஹாலோகிராம் எனப்படும் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி ஜனவரி 23-ம் தேதி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி. நேதாஜியின் ஹாலோகிராம் சிலைக்கு பதிலாக விரைவில் பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும். சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை நாம் கொண்டிருக்கிறோம். 2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். நாட்டில் சீர்திருத்தம், நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பிற சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன’ என்று கூறியிருக்கிறார்.