நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 5 சதவிகித இடங்களே ஒதுக்கி இருப்பதால், அக்கட்சியின் கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஆகவே, கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
தி.மு.க. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான். இதனால் தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தவரை காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களை ஒதுக்கினார் கருணாநிதி. ஆனால், கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமே தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கவுரவமாக 10 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதேபோல, தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டிலும் வெறும் 5 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
மேலும், சீட் கிடைக்காத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் தமிழகம் முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இதனால், தி.மு.க.வினரின் வெற்றி பாதிக்கப்படும் என்பதால், அக்கட்சியினர் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.