உதயநிதி படத்துக்காக தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், நடித்திருக்கும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. ஹிந்தியில் 2019-ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். ஹிந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவான இப்படத்தை, தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். அதேபோல, ஹிந்தியில் ஆசுமான் குரானா கதாநாயகனாக நடித்திருக்க, தமிழில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். போனி கபூரின் பேவியூ ஸ்டுடியோஸ், ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன. இப்படத்தின் டீசர் தற்போது ரலீஸாகி இருக்கிறது. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில்தான், தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதாவது, கொரோனா பலவாறாக உருமாற்றமடைந்து டெல்டா வைரஸாகி, தற்போது டெல்மைக்ரான் வைரஸாகி உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியது. எனவே, தங்களது கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்ய ஏதுவாக லாக்டவுனை ரத்து செய்தது தி.மு.க. அரசு. இதையடுத்து, ஸ்டாலினையும், தி.மு.க. அரசையும் பலவாறாக கிண்டல் செய்து வெளுத்து வாங்கினர் நெட்டிசன்கள்.
குறிப்பாக, தேர்தல் திருவிழாவுக்காக கொரோனாவுக்கு லீவு விடப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. ஆகவேதான், கோயில்களுக்கு, கடைவீதிகளுக்கு வரும் கொரோனா தேர்தல் பக்கம் மட்டும் வருவதில்லை என்றெல்லாம் கிண்டல் கேலி செய்தனர். ஆனால், இதையெல்லாம் தி.மு.க. அரசு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த நிலையில்தான், தற்போது தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. எனவே, உதயநிதி நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால்தான், தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது தி.மு.க. அரசு என்று நெட்டிசன் மீண்டும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.