அடங்கமறு, அத்து மீறு, திமிரி எழு என்று தனது கட்சித் தொண்டர்களிடையே உணர்ச்சி பொங்க பேசி வரும் வி.சி.க. தலைவர் திருமாவளவன், தற்போது அறிவாலயத்திற்கு கட்டுப்பட்டு அடங்கி, ஒடுங்கி அமைதி காப்பது அக்கட்சித் தொண்டர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவராக இருப்பவர் திருமாவளவன். அப்பாவி தொண்டர்களிடையே உணர்ச்சிப்பூர்வமாக பேசி ஹிந்து மதத்திற்கு எதிராக மடைமாற்றும் பணியையே இன்றுவரை மேற்கொண்டு வருகிறார் என்பது பலரின் குற்றச்சாட்டு. தன்மானம் மிக்கவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் என்று திருமாவளவன் மேடைகள்தோறும் ஆவேசமாக பேசினாலும், வி.சி.க.வை ஒரு பொருட்டாக இன்றுவரை தி.மு.க. மதித்ததில்லை என்பதே நிதர்சனம். விடுதலைச் சிறுத்தைகள் கொடி எங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாகத் திரிகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என தமிழக காவல்துறைக்கு எதிராக வி.சி.க. மூத்த தலைவர் வன்னியரசு ஆவேசமாக பேசி இருந்ததே சிறந்த சான்று.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புகைப்படத்தையோ, கொடியையோ புறக்கணித்தால் அக்கட்சியின் அடையாளம் மறைந்து விடாது. எனவே, தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பதன் மூலம் வி.சி.க.வுக்கு ஆளும் தி.மு.க. அரசு எந்தளவிற்கு மதிப்பளித்துள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். தொண்டர்களிடையே மானம், ரோஷம் குறித்து வகுப்பெடுக்கும் திருமாவளவன், தற்போது அரசியலுக்காக அப்பாவி வி.சி.க. தொண்டர்களின் தன்மானத்தை அறிவாலயத்தில் அடகு வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.