முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மாநில முதல்வர்கள் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்திருக்கிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் பராமரிப்பு தமிழக அரசு வசம் இருக்கிறது. இந்த அணையின் தண்ணீரை நம்பித்தான் 5 மாவட்ட விவசாயிகள் இருக்கிறார்கள். கேரள அரசோ, முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால், கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய அணை கட்டும் திட்டத்தை முன்வைத்திருப்பதாக அம்மாநில அரசு கூறிவருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கேரள சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான், முல்லைப் பெரியாறில் புதிய கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நேற்று பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், “முல்லைப் பெரியாறை பொறுத்தவரை தமிழகத்துக்கு தண்ணீர் தேவை. அதேசமயம், கேரளாவுக்கு பாதுகாப்பு முக்கியம். ஆகவே, தமிழகத்துக்குச் செல்லும் நீரின் அளவு குறையாமலும், கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் புதிய அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது அதன்படி, விரைவில் நடக்கவிருக்கும் முதல்வர்கள் கூட்டத்தில் புதிய அணை குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இதில், இரு தரப்பிலும் உடன்பாடு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு உறுதியாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.