ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்கு முன்பு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் தன்வந்திரி மந்திரம் சொல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, உடல் நலம் சரியில்லாமல் போகும்போது, நோய் தீர வேண்டி ஒருபுறம் ஆஸ்பத்திரிக்குச் சென்றாலும், இன்னொருபறம் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளிடமும் வேண்டிக் கொள்வது அனைத்து மதத்தினரின் வழக்கம். குறிப்பாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷன் செய்யும் நிலை ஏற்பட்டால், வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்வார்கள். இதில், ஹைலைட் என்னவென்றால் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை, எங்களால் முடிந்ததை செய்து விட்டோம். இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று டாக்டர்களே கைவிரித்து விடுவது வழக்கம்.
அதேபோல, டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் சிலர் பரிபூரண குணமடைந்து விடுவார்கள். அப்போது, இது மெடிக்கல் மிராக்கிள். கடவுள்தான் காப்பாற்றி இருக்கிறார் என்று டாக்டர்களே ஆச்சரியப்பட்டு வாய்பிளப்பது வழக்கம். மேலும், சில டாக்டர்கள் மிகச் சிக்கலான ஆபரேஷன்களை செய்யும்போது, தங்களது இஷ்ட தெய்வங்களை மனதுக்குள் வேண்டிக் கொள்வதும் உண்டு. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்வதற்கு முன்பு, அந்த ஆபரேஷனை செய்யப்போகும் ஒட்டுமொத்த மருத்துவக் குழுவும் தன்வந்திரி மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு மருத்துவக் குழுவினர் தன்வந்திரி மந்திரம் சொல்வதை அக்குழுவிலுள்ள ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. கடவுள் நம்பிக்கை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே, இதற்கு டாக்டர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?