ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த  தீரர் மாயாண்டி சேர்வை

ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தீரர் மாயாண்டி சேர்வை

Share it if you like it

தீரர் மாயாண்டி சேர்வை

ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த திருமங்கலம் தீரர் மாயாண்டி சேர்வை

இந்திய திருநாட்டின் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த 1940ம் ஆண்டு காலத்தில், தேசபக்தர்கள் மீது ஆங்கிலேயர்கள் சொல்லொண்ணாத அடக்குமுறைகளை ஏவி விட்டு, சுதந்திரம் கேட்கும் குரல் எங்கே ஒலித்தாலும், அதன் குரல் வளையை நசுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருமங்கலம் நகரைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை என்ற இளைஞர் இந்த ஏகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு எதிராக அதிரடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தார். இதை தொடர்ந்து ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி தரும் வகையில், மாயாண்டி சேர்வை பரபரப்பான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் குறிப்பிட்ட தேதியில், மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றியே தீருவேன் என்று, பல நாட்களுக்கு முன்னே ஆங்கிலேயருக்கு சவால் விட்டார்.

https://youtu.be/V2uAp2MIL94

ஏற்கனவே மதுரை நகரில், நன்கு அறியப் பட்டவர் என்பதாலும், நிறைய சம்பவங்களை செய்து காட்டியவர் என்பதாலும், அவரது போர் குணத்தை நன்கு அறிந்திருந்த ஆங்கிலேய போலீசார், அவரை கைது செய்வதில், மிகவும் தீவிரம் காட்டினர். பாரம்பரிய சிறப்பு மிக்க மதுரை நகரில், ஏதாவது சம்பவம் நிகழ்த்தப் பட்டால், அது  மொத்த  இந்தியா முழுவதும் பேசப்படும் நிலை இருந்ததால், ஆங்கிலேய அரசுக்கு அது பெரும் தலை குனிவாக இருக்கும் என்று கருதிய போலீசார், தங்களது நடவடிக்கைகளை  தீவிரப் படுத்தினர்.

அன்றைய தினங்களில், மதுரை மாநகர் முழுவதும் பரபரப்புடன் காணப் பட்டது. எப்படியேனும் மாயாண்டி சேர்வையை பிடித்தே தீருவது என்று நகரின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நுழைந்து, போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நிகழ்த்தி வந்தனர்.

ஆனால் மாயாண்டி சேர்வையோ வேறு விதமான அதிரடி திட்டத்துடன் செயல்பட்டு இருந்தார். போலீசார் மாயாண்டி சேர்வையை மற்ற இடங்களில் சல்லடை போட்டு தேடி அலைந்து கொண்டிருக்க, அவரோ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தில் சொன்ன தேதிக்கு பத்து நாட்கள் முன்பே ஏறி விட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தில், ஒவ்வொரு நிலைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில் அறை போன்ற பகுதி இருக்கும். அதில் ஏறிய மாயாண்டி சேர்வை, கடைசி நிலையில் உள்ள அந்த  அறையில் தங்கி விட்டார்.

பத்து நாட்களுக்கு முன்பே, கோபுரத்தில் ஏறி விட்ட நிலையில், மனிதன் வாழ்வதற்கு உண்ண வேண்டும் என்பதால், பத்து நாட்கள் எப்படி தாக்குப் பிடிப்பது என்பதை அறிந்திருந்த மாயாண்டி சேர்வை, கை நிறைய நிலக் கடலையையும் சிறிய பாத்திரத்தில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு, கோபுரத்தில் ஏறி, இடையில் உள்ள அறையில் தங்கிக் கொண்டார்.

மாயாண்டி சேர்வையை பிடிக்க ஆங்கிலேய போலீசார் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அனைத்து பாதைகளையும் அடைத்து, தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கியும், மதுரையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடிக் கொண்டிருக்க, அவரோ கோவில் கோபுரத்தில் ரகசியமாக தங்கி விட்டார்.

இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பாகவே கோபுரத்தில் மாயாண்டி சேர்வை ஏறி விட்டதால் எடுத்து வந்த கடலை சில நாட்களில் தீர்ந்து விடவே, மீதியுள்ள நாட்களை பட்டினியோடே கழித்திருக்கிறார்.

சாப்பாடு இல்லாமல் கூட சமாளித்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் நீண்ட நாட்கள் கடத்துவது என்பது, இயலாத காரியம். அதே போல் தண்ணீர் இரண்டொரு நாளில் தீர்ந்து விடவே, நீருக்காக தனது சிறுநீரையே தான் கொண்டு வந்த பாத்திரத்தில் பிடித்து, குடித்து வந்துள்ளார்.

தீவிரமான களைப்பு மேலிட்டாலும், மாயாண்டி சேர்வையின் சுதந்திர தாகம் மட்டும் தீராத நிலையில் பசியோடும், தாகத்தோடும், களைப்போடும் கோவில் கோபுரத்திலேயே, அவர் காத்திருந்தார்.

ஆங்கிலேய போலிசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி, பத்து நாட்களுக்கும் மேலாக மாயாண்டி சேர்வை பற்றிய தகவல் ஏதும் இல்லாத போது, மதுரை மக்கள் தீரர் மாயாண்டி சேர்வை தனது சபதத்தில் தோற்று விட்டாரோ? என்று அதிர்ச்சியுற்றிருந்தனர்.

அதே சமயம் கோவில் வழியாக சென்ற மதுரை மக்கள், கோவில் கோபுரத்தில் இந்தியக் கொடி தெரிகிறதா? என்று ஏக்கமுடன் இருந்தனர். அதனை பார்த்த போலிசார், மாயாண்டி சேர்வை தப்பி ஓடி விட்டார், அவர் ஒரு நாளும் கோவில் கோபுரத்தில் கொடியை ஏற்ற முடியாது என்று, மக்களைப் பார்த்து கேலி செய்துள்ளனர். ஒரு கால கட்டத்தில் மதுரை மக்கள் இது நடக்காது, என்று முடிவு செய்து விட்டு, கோவில் கோபுரத்தை அண்ணார்ந்து பார்ப்பதையும் நிறுத்தி விட்டனர்.

ஆனால் மாயாண்டி சேர்வை அறிவித்த அந்த பத்தாவது நாளும் வந்தது. இந்த நாளோடு கதை முடிந்தது, மாயாண்டி சேர்வை தனது சபதத்தில் தோற்று விட்டார் என்று போலிசார் கேலி கொண்டிருந்த சமயத்தில், கோவிலின் வடக்கு கோபுரத்திலிருந்து திடிரென ஓர் குரல் ஓங்கி ஒலித்தது “வந்தேமாதரம் , பாரத் மாதா கி ஜே” என்ற அந்த குரல், களைப்பையும் மீறி ஓங்கி ஒலித்தது.

குரல் வந்த திசையில், போலிசார் பார்த்தனர். அங்கே வடக்கு கோபுரத்தின் உச்சியில், இந்திய தேசியக் கொடி தன்னாலே உயருகிற அதிசயத்தை அனைவரும் பார்த்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும், மதுரை மக்களும், இந்த அதிசய நிகழ்வைக் கண்ணார கண்டதுடன் சுற்றுப்புறத்தில் இருந்தோர் இதனை கேள்விப்பட்டு ஓடி வந்து, கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதையும் பார்த்து அகமகிழ்ந்தனர்.

அதே சமயம், அங்கிருந்தவர்கள் வந்தே மாதரம் என்று முழங்கிட, ஆங்கிலேய போலீசாரோ பெரும் அவமானத்தில் மூழ்கி அதிர்ச்சியடைந்தனர். உயரமான கோபுரத்தின் உச்சியில், கொடி கட்டப்படிருந்தது என்பதால், உடனடியாக அந்த கொடியை அகற்ற போலீசாரால் முடியவில்லை. கொடியை கீழே இறக்கவும் மாயாண்டி சேர்வையை பிடிக்கவும், காவலர்கள் பலர் கோபுரத்தில் ஏறினர். ஆனால் பலமுறை, ஆங்கிலேய போலீசாரை ஏமாற்றியிருந்த வித்தகரான மாயாண்டி சேர்வை ,இந்த முறையும் பத்து நாட்கள் உண்ணாத களைப்பு இருந்தாலும் ,போலிசாரின் கைகளில் சிக்காமல் அவர் தப்பிப் பறந்து விட்டார்.

தீரர் மாயாண்டி சேர்வை, தான் சொன்னபடியே மீனாட்சி அம்மன் கோவிலில், தேசியக் கொடி ஏற்றபட, ஆங்கிலேயர்களின் ஆணவம் இறக்கப்பட்டது. இங்கே ஜெயித்தது மாயாண்டி சேர்வை மட்டுமல்ல, சுதந்திர வேட்கையும் தான்.

இதுபோன்று இந்திய சுதந்திர போராட்டத்தில், தீரர் மாயாண்டி சேர்வை தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில்,  1904 ஆம் ஆண்டு, மார்ச் 3ம் தேதி பிறந்த மாயாண்டி சேர்வை, சிறந்த ஓவியராகவும் திகழ்ந்துள்ளார். அவர் வரைந்த மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் படம், இன்றும் காலத்தால் அழியாது, புகழ் பெற்று விளங்குகிறது.

தீரர் மாயாண்டி சேர்வை, திருமங்கலம் தெற்குத் தெரு பகுதியில் வாழ்ந்து, 1992 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மறைவுக்குப் பின்னர், திருமங்கலம் நகர் விருதுநகர் சாலை பகுதியில் அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, தற்போது அவரது சமாதியில் உறவினர்கள் மற்றும் சமுதாய மக்களால், ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்திடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

  • ராஜேஷ்

Share it if you like it