படிக்கும் காலத்தில் பி.சி. சான்றிதழ் வைத்திருந்த தி.மு.க. கவுன்சிலர், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி. சான்றிதழ் கொடுத்து தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மனைவி விஜயா. தி.மு.க.வைச் சேர்ந்த இவர், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி. பொதுவார்டாக அறிவிக்கப்பட்ட 33-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். நகராட்சி சேர்மன் பதவிக்கு இவரது பெயர்தான் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்தான் ஜாதி சான்றிதழை மாற்றி கொடுத்திருப்பதாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், தாசில்தார், நகராட்சி ஆணையர், தேர்தல் நடத்திய அலுவலர் ஆகியோருக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள் அய்யாபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சின்னமாடன் மகன் செல்லப்பாவும், தென்காசி மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலாளர் தளவாய் ஆகியோர். அப்புகாரில், ‘விஜயா, தான் படிக்கும் காலத்தில் 2003-ம் ஆண்டு பி.சி. சான்றிதழ் பெற்றிருக்கிறார். ஆனால், தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி. சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டிருக்கிறார். அதாவது, வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான 4.2.2022-ம் தேதிவரை பி.சி.யாக இருந்தவர், 5.2.2022-ம் தேதியன்று எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
அதுவும், கடையநல்லூர் தாலுகாவில் குடியிருக்கும் இவர், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பெற்றிருக்கிறார். இவரது சகோதரி ஜெயா, பி.சி. கோட்டாவில் புளியங்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக இருக்கிறார். ஆகவே, ஜாதி சான்றிதழில் முறைகேடு செய்திருக்கும் விஜயா மீது நடவடிக்கை எடுத்து, அவரது கவுன்சிலர் பதவியை பறிக்க வேண்டும். மேலும், அவரது எஸ்.சி. ஜாதி சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனினும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆகவே, நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.