ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் பொதுமக்களின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய அம்மாநில காவல்துறை முடிவு செய்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் உயர்மட்ட பாதுகாப்பு மறு ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ஜெனரல் தில்பாக் சிங், தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும் அறிவுரை கூறினார். மேலும், நிகழாண்டு பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை போலீஸார் எதிர்கொண்ட விதம் குறித்து பாராட்டுத் தெரிவித்தவர், 2 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் 2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெனரல் தில்பாக் சிங், அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாத சம்பவங்களை தடுப்பதற்கான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். தவிர, இலக்கு சார்ந்த அணுகுமுறை குறித்து வலியுறுத்தியவர், எந்தவொரு நாசக்கார மற்றும் பயங்கரவாத ஆதரவு குழுக்களுக்கும் இடமளித்துவிடக் கூடாது. பட்டியலிடப்பட்ட பகுதிகளை மறுபரிசீலனை செய்து, ஏரியாவில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றார். அதேபோல, குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில்தான், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் பொதுமக்களின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறை உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதாவது, தீவிரவாதிகளுக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் சிலர் அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். இதனால், அந்த இடங்களில் தலைமறைவாக இருந்து பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இவ்வாறு தாக்குதல் நடத்திய 12 வீடுகளை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். முதல்கட்டமாக இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது. இதேபோல, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அடிப்படைவாதிகளின் வீடுகளையும் பறிமுதல் செய்யவும் காவல்துறை முடிவு செய்திருக்கிறது.
பாரத தேசத்தை தர்மதேசமாக மாற்றுவோம்⛩️🇳🇵🔥🇮🇳⛩️