குடிமகன்களால் தொடரும் பாலியல்கள்! மதுக் கடைகளுக்கு மூடுவிழா எப்போ?

குடிமகன்களால் தொடரும் பாலியல்கள்! மதுக் கடைகளுக்கு மூடுவிழா எப்போ?

Share it if you like it

போதை ஆசாமிகளால் தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆகவே, ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தபடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாலியல் பலாத்கார சம்பவங்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் வேலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பிறகு, தமிழகத்தில் செய்தித்தாள்களை திறந்தாலும் சரி, தொலைக்காட்சிகளை ஆன் செய்தாலும் சரி, எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்தான். இதிலும், 2 வயது சிறுமியை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்தது கொடூரத்தின் உச்சம். இப்படி தினந்தோறும் 3 முதல் 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் வரை தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. அதேபோல, கொலை, கொள்ளை சம்பவங்களும் பஞ்சமில்லை. இதற்கு காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் அடங்கி ஒடுங்கி இருந்த ரவுடிகள், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தலைதூக்கி இருப்பதுதான்.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களுக்கு போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பதும் மற்றொரு காரணமாகும். தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மது, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துகள், தற்போது மீண்டும் சரளமாக புழங்கத் தொடங்கி இருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, செயலிழந்து நிற்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் மதுபானக் கடைகளை அரசே நடத்துவதால், கொலைகார்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு வசதியாகப் போய்விட்டது.

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்று வாக்குறுதி அளித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். இத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று, ஆட்சியைக் கைப்பற்றி, ஸ்டாலின் முதல்வராகவும் பதவியேற்று விட்டார். ஆனால், இதுவரை தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி, வசூலை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் தி.மு.க. ஈடுபட்டது. இதற்கு காரணம், தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை தி.மு.க. தலைவர்களின் பினாமிகளுக்குச் சொந்தமானதுதான்.

இதுகுறித்து குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தமிழகத்தில் இருக்கும் மதுபானத் தொழிற்சாலைகள் அனைத்துமே அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்குச் சொந்தமானதுதான். ஆனால், இவை அவர்களது பினாமிகளின் பெயர்களில் இயங்கி வருகின்றன. இந்த மது தொழிற்சாலைகள் மூலம் தி.மு.க. தலைவர்கள் கோடிகளில் கொழித்து வருகிறார்கள். அதேபோல, தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அளவிலான வருவாயை கொடுப்பதும் டாஸ்மாக் மதுபான விற்பனைதான். ஆகவே, தமிழகத்தில் மதுவை ஒழிப்பது என்பது இயலாத காரியம். அதேபோல, மதுவை ஒழிப்பதாகக் கூறுவதும் வெறும் கண்துடைப்புதான். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்வரை, மதுவை ஒழிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆகவே, கொலை, கொள்ளை, கற்பழிப்புகளையும் தவிர்க்க முடியாது என்பதுதான் கசப்பான உண்மை” என்றார்கள் வேதனையுடன்.

அப்போ, மதுவை ஒழிப்பேன்னு சொன்னது பொய்யா கோப்பால்…!


Share it if you like it