வாஞ்சிநாதன் மதன்லால் திங்கரா போன்ற இளைஞர்களை உருவாக்கியவர் – வ.வே.சுப்பிரமணியம்

வாஞ்சிநாதன் மதன்லால் திங்கரா போன்ற இளைஞர்களை உருவாக்கியவர் – வ.வே.சுப்பிரமணியம்

Share it if you like it

விடுதலை வேள்வியில் வ.வே.சு. ஐயர்

(பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற பல புரட்சி வீரர்களுக்கு வழிகாட்டியவர் தான் வ.வே.சுப்பிரமணிய ஐயர்)

திருச்சியில் 150 ஆண்டுகள் பழமையான காந்தி மார்க்கெட் அமைந்துள்ள பகுதி தான் வரகனேரி. இந்த வரகனேரியில் தான், 1881-ம் ஆண்டு, ஏப்ரல் 2-ம் தேதி பிறந்தார், வ.வே.சு. ஐயர். வ.வே.சு. தந்தை பெயர் வேங்கடேஸ்வர ஐயர், தாயார் காமாட்சி அம்மாள்.

1895-ல் வ.வே.சு. மெட்ரிகுலேஷன் தேறினார். பிறகு திருச்சி அர்ச்சூயைப்பர் கல்லூரியில், பி.ஏ. படித்து முடித்தார். 1897-ல் வ.வே.சு. பி.ஏ. படித்து முடிக்கும் முன்பே, அவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் பாக்கியலட்சுமி அம்மாள். 1902-ல் வக்கீல் தேர்வில் வெற்றி பெற்றார். வக்கீல் படிப்பில் தேறியவுடன், சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவிலிருந்த ஐயரை, அவரது நெருங்கிய உறவினர் ரங்கூனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வியாபாரம் செய்து வந்த நாட்டுக் கோட்டை செட்டியார்களுக்கு, வழக்கறிஞராக பணியாற்றினார். ரங்கூனில் இருந்த அவர், தனது மாமாவின் உதவியோடு, 1907-ல் லண்டனுக்கு பாரிஸ்டர் படிக்க பயணமானார்.

https://youtu.be/ytsGWeipST0

சைவ உணவு விடுதிகளைத் தேடி, வ.வே.சு. லண்டன் தெருக்களை வலம் வந்து கொண்டிருந்தார். அவரது நண்பர் ஒருவர், “லண்டனில் ‘இந்தியா ஹவுஸ்’ என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கு இந்திய மாணவர்கள் பலர் தங்கியுள்ளனர். அங்கு தரமான சைவ உணவு கிடைக்கும்” என்றார்.

இந்தியா ஹவுஸுக்குள் ஓர் ஆங்கிலேயே இளைஞனைப் போல உடையணிந்து, இந்திய முகத்தோடு வந்த வ.வே.சு., இந்தியா ஹவுஸ்ஸில் பணியாற்றிய பணிப்பெண் வரவேற்றார்.

தான் இந்த விடுதியின் தலைவரைப் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். சற்று நேரத்திற்கு பிறகு, இந்தியா ஹவுஸ்ஸின் தலைவர் வீர சாவர்க்கர் அங்கு வந்தார். வீர சாவர்க்கரை பார்த்த மாத்திரத்திலேயே, வ.வே.சு.க்கு அவரைப் பிடித்து விட்டது.

சாவர்க்கரின் நல்ல குணத்தைப் பயன்படுத்தி, புகழ் பெற்ற கைது ஸ்காட்லாந்து யார்டு போலீசார், பல உளவாளிகளை இந்தியா ஹவுஸ்க்குள் நுழைத்து, உளவு பார்த்தனர். வ.வே.சு. சாதுரியத்தால் உளவு போலீசார் அடையாளம் காணப் பட்டு வெளியேற்றப் பட்டனர்.

அது மட்டுமல்ல, உளவு பார்ப்பதில் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசாரையே, உளவு பார்க்க பாண்டிச்சேரியைச் சேர்ந்த எம்.பி. திருமலாச்சாரியை, அங்கு வேலைக்கு சேர்த்து விட்டார். திருமலாச்சாரிக்கு ஸ்காட்லாந்து யார்டு வழங்கிய  5 பவுண்டு சம்பளம், இந்தியா ஹவுசுக்கு வந்து சேர்ந்தது.

முதல் உலகப் போரின் முடிவில் 1919-ம் ஆண்டு, இங்கிலாந்து வெற்றி அடைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாட, அரசியல் எதிரிகளுக்கு பிரிட்டிஷ் அரசு, பொது மன்னிப்பு வழங்கியது. இதனால் புதுவையில் தங்கியிருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சொந்தப் பகுதிகளுக்கு திரும்பினார்கள்.

வ.வே.சு.,  தனது சொந்த ஊரான திருச்சியில் குடியேறினார். இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களை சுற்றிப் பார்த்தார், காசிக்கு வந்தார். காசிக்கு வருபவர்கள் ஏதாவது விரதம் ஏற்றுக் கொள்வது வழக்கம். வ.வே.சு., இரண்டு விரதங்களைப் பூண்டார்.

ஒன்று, தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சி பணிகளைத் தொடர்வது. இரண்டு ஆரிய சமாஜ குருகுலம் போல, தமிழ் நாட்டிலும் ஒரு குருகுலம் ஆரம்பிப்பது. சுற்றுப் பயணம் முடித்த பிறகு, சென்னை திரும்பிய வ.வே.சு., 1920-ல் ‘தேசபக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

காசியில் பூண்ட விரதப்படி, தமிழ் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தார். கம்ப ராமாயணம் பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். சேரன் மாதேவியில் தனது விருப்பப்படி, ஒரு குருகுலத்தை ஆரம்பித்தார். குருகுலத்தை பாரதிய பாரம்பரிய முறைப்படி நடத்தி வந்தார்.

குருகுல மாணவர்களை அழைத்துக் கொண்டு, வ.வே.சு. அடிக்கடி சுற்றுலா செல்வதுண்டு. 1925, ஜூன் 1-ம் தேதி குருகுலத்து மாணவர்கள் பாபநாசம் அருவிக்குச் செல்ல முடிவு செய்தனர். முதலில் வ.வே.சு.  போக விரும்பவில்லை. மாணவர்களுடன் அவர் மகள் சுபத்ராவும் புறப்பட்டார். மகளைத் தனியாக அனுப்ப மனமில்லாமல் அவரும் புறப்பட்டார்.

பாபநாசத்திற்கு அருகில் உள்ள கல்யாணி தீர்த்தத்தில் நீராடி விட்டு, மாணவர்கள திரும்பிக் கொண்டிருந்தார்கள். குறுகலான கல்யாணி தீர்த்தத்தைக் கடந்து செல்ல வேண்டுமானால், தண்ணீரின் மீது நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகள் மீது, கால் வைத்து தாண்டித் தான் செல்ல வேண்டும்.

வ.வே.சு.  ஒரு பாறையில் நின்று கொண்டு, மாணவர்கள் பாறையை தாண்ட உதவி செய்தார். மற்ற மாணவர்களைப்  போல, தானும் பாறையை தாண்ட வேண்டும் என்று அடம் பிடித்தாள், சுபத்ரா. வ.வே.சு. சம்மதித்தார். பாறையை தாண்டும் போது, பாவாடைத் தடுக்கி சுபத்ரா கீழே ஓடிக்கொண்டிருந்த சிற்றோடையில் விழுந்து விட்டார். ஓடை சிறிது என்றாலும், வேகம் அதிகம். தன் மகள் நீரில் அடித்துக் கொண்டு போவதைப் பார்த்த வ.வே.சு.  அவளைக் காப்பாற்ற ஓடையில் குதித்தார்.

குதித்தவர் குதித்தது தான், மகளோடு ஜல சமாதியானார். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படித்து பல மொழிகள் கற்ற வ.வே.சு., வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். ஆனால் தேச விடுதலைக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்தார்.

தேம்ஸ் நதிக்கரையில் நடந்த அந்திமக் கிரியை :

வ.வே.சு. ஐயர் கடல் கடந்து ரங்கூன் (பர்மா) செல்லத் தயாரானதும், அவரது தாய் காமாட்சி அம்மாள் மகனை திரும்பவும் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று வருந்தினார். துரதிருஷ்டவசமாக காமாட்சி அம்மாள் நினைத்தது உண்மையாகி விட்டது. தனது மகன் வ.வே.சு. ஐயர், பிரிட்டிஷ் போலீசாரால் தேடப் படுவதை அறிந்து, மனவேதனை அடைந்த காமாட்சி அம்மாள், தனது வீட்டின் அருகில் இருந்த உள்ள குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது ஐயர் லண்டனில் இருந்தார். தன் தாயாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை, லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் செய்தார். காவிரிக் கரையில் நடக்க வேண்டிய சடங்குகள், தேம்ஸ் நதிக்கரையில் நடந்தது. தேசத்திற்காக வ.வே.சு. ஐயர் கொடுத்த விலையில் ஒன்று, அவரது அம்மாவின் உயிர்.

வ.வே.சு. ஐயரின் சாகசம் :

வ.வே.சு. ஐயர் புதுவையில் இருக்கும் போது, அவரை கடத்தி சென்றாவது கைது செய்ய, பிரிட்டிஷ் போலீசார் திட்டமிட்டனர். வ.வே.சு. தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார் என்ற தகவலை அறிந்த ஒரு கும்பல் (போலீஸார் ஏற்பாடு செய்த கும்பல்), அந்த வீட்டை சூழ்ந்து கொண்டது. சிறிது நேரத்திற்குள் அந்த வீட்டிற்குள் அழுகுரலும், ஒப்பாரியும் கேட்டது. அதன் பிறகு அந்த வீட்டிலிருந்து ஒரு பிணம் பாடையில் தூக்கிச் செல்லப் பட்டது. சுடுகாட்டுக்கு போகும் வழியில் பிணம் இறக்கப் பட்டது. யாரும் பின் தொடரவில்லை என்பது உறுதியான பிறகு, பிணத்தின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பிணம் எழுந்து நடக்கலாயிற்று. அன்று பிணமாக நடித்து பிரிட்டிஷ் போலீசாரிடம் இருந்து தப்பித்தார், வ.வே.சு.ஐயர்.

திருநெல்வேலியிருந்து வாஞ்சிநாதன் என்ற இளைஞர் புதுவைக்கு நீலகண்ட பிரம்மச்சாரியை பார்க்க வந்திருந்தார். வாஞ்சிநாதன் வந்த போது, நீலகண்ட பிரம்மச்சாரி புதுவையில் இல்லை. அந்த சமயத்தில் எதேச்சையாக வ.வே.சு ஐயரை வாஞ்சிநாதன் சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே ஆஷ் துரையை (திருநெல்வேலி கலெக்டர்) சுட்டுக் கொல்ல தகுதியான நபர் வாஞ்சிநாதன் என்பதை முடிவு செய்து விட்டார். ஐயரின் கொள்கைகள் வாஞ்சியை கவர்ந்தது. ஒரு வாரத்திற்குள் வாஞ்சிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்து, ஆஷ் துரையின் கதையை முடித்து விட்டார், வ.வே.சு. ஐயர். ஒருவார இடைவெளியில் தான் தற்செயலாக சந்தித்த, ஒரு புதிதாக திருமணமான இளைஞனை உயிர்த் தியாகம் செய்ய வைத்த சாதனையாளர் தான், வ.வே.சு.ஐயர்.

  • புதுவை சரவணன்

Share it if you like it