வளர்ச்சிக்கு குஜராத் மாடல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி மாடலா என்று கேரள அரசிற்கு பிரபல அரசியல் விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரே மாநிலம் கேரளா. இம்மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் போன்றே கேரளாவிலும் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக படுகொலைகள் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் என பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதவிர, 2-வது முறையாக பினராயி விஜயன் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு, மாநிலத்தின் வளர்ச்சி மேலும் மோசமடைந்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில், கேரள அரசிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சிபிஐ.எம் தலைமையிலான கேரள அரசு பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நல்லாட்சிக்கு உதவும் முறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரி குழுவை குஜராத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த வகையில், கேரள தலைமைச் செயலர் வி.பி. ஜாய் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் 2 நாள் பயணமாக குஜராத்து சென்றுள்ளனர்.
கம்யூனிஸ்ட் அரசின் இம்முடிவை கேரள பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் வரவேற்றுள்ளார். குஜராத் மாடல்தான் சரியான மாதிரி என்பதை முதல்வர் தற்பொழுது உணர்ந்துள்ளார். இறுதியாக, குஜராத் மாதிரியின் வளர்ச்சியை ஆய்வு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. நமது மாநிலம் குஜராத்தில் இருந்து குறிப்பாக நிர்வாகம், தொழில்துறை மற்றும் எரிசக்தி துறைகளில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஊழல், ஊதாரித்தனம் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் மட்டுமே கேரளா வளர்ச்சியடையும் என கருத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீஜித் பணிக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; குஜராத் மாதிரி ஆட்சி மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்ய கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை, குஜராத் மாடல் பற்றி கேட்டால் தோழர்கள் எதிர்ப்பு முறையில் இருந்தனர். அடுத்து என்ன? சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க உ.பி மாதிரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள், பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதுதான் இந்த புல்டோசர் கலாசாரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைமேற்கொள்காட்டியே, ஸ்ரீஜித் பணிக்கர் கேரள அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.