‘குதுப் மினார் அல்ல… சூரிய கோபுரம்’!

‘குதுப் மினார் அல்ல… சூரிய கோபுரம்’!

Share it if you like it

டெல்லியில் இருப்பது குதுப் மினார் கோபுரமும் அல்ல, குத்புதீன் ஐபக் மன்னரால் கட்டப்பட்டதும் அல்ல. அது சூரியதிசையை அறிய ராஜா விக்ரமாதித்யாவால் கட்டப்பட்ட சூரியக் கோபுரம் எந்று இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ.) ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இருக்கும் பழமையான மசூதிகள் மற்றும் புராதனச் சின்னங்கள் அனைத்தும் ஹிந்து மன்னர்களால் கட்டப்பட்டவை என்று ஹிந்து அமைப்புகள் உரிமை கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்தது பாபர் மசூதி அல்ல, ராமர் கோயில், ராம ஜென்ம பூமி என்று கூறிவந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் மசூதியின் அடித்தளம் ஹிந்து கட்டடக் கலை அமைப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அது ராமர் கோயில்தான் என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இதன் பிறகு, உ.பி. மாநிலம் மதுராவிலுள்ள ஷாயி ஈத்கா மசூதி, கிருஷ்ண ஜென்ம பூமி என்று கூறி, கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அதேபோல, ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் மற்றும் ஜாமா மசூதி ஆகியவை ஷாஜஹானால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமும், மசூதியும் அல்ல. ராஜா பரமர்தேவ் என்பவரால் கட்டப்பட்ட சிவபெருமான் கோயில் மற்றும் அரண்மனை என்ற வாதமும் இருந்து வருகிறது. இது தொடர்பாகவும் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள கியான்வாபி மசூதி, ராஜா தோடர்மல் என்பவரால் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில். இதை இடித்துவிட்டு ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டதுதான் மசூதி என்று கூறி கோர்ட்டல் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது..

அந்த வரிசையில், தற்போது டெல்லியின் குதுப்மினாரும் இணைந்திருக்கிறது. மத்திய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா என்பவர், “டெல்லியில் இருப்பது குதுப் மினார் கோபுரமும் இல்லை, அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டவும் இல்லை. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்ட சூரிய கோபுரம். அதாவது, சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டப்பட்டது. ஏ.எஸ்.ஐ. சார்பில் நான் அங்கு ஆய்வு செய்தபோது அதற்கான பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21-ம் தேதி இதன் நிழல் அரை மணி நேரத்திற்கு கீழே விழாது. அந்தளவுக்கு அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட கோபுரம். இந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டடமே தவிர, அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்.

டெல்லியின் மெஹரோலி பகுதியில் இருக்கும் இந்த குதுப்மினார் அருகே குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி) எனும் பெயரிலான மசூதி ஒன்று இருக்கிறது. இந்த மசூதி 27 ஹிந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகவும் டெல்லி நீதிமன்றங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் வழக்குத் தொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it