சீனாவை முந்தியது இந்திய விமானப்படை!

சீனாவை முந்தியது இந்திய விமானப்படை!

Share it if you like it

வலிமையான விமானப்படையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்தில் இந்திய விமானப்படை இருப்பதாக தி வேர்ல்டு டைரக்டரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி ஏர்கிராஃப்ட் என்கிற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, உலகில் வலுவான ராணுவ படை பலத்தில் இந்தியா 4-வது இடத்தில் இருப்பதாக தி மிலிட்டரி டைரக்ட் என்கிற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையதளம் மதிப்பிட்டிருந்தது. பல்வேறு உலக நாடுகளின் ராணுவ படை பலம், அவற்றின் எண்ணிக்கை மற்றும் ஆற்றல் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், உலகிலேயே ராணுவ பட்ஜெட்டுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கும் நாடான அமெரிக்கா, ஆண்டுக்கு 732 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. சீனா 261 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. இந்த வரிசையில், இந்தியா 71 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. அதேபோல, உலகளவில் கடல் வழி பாதுகாப்பில் சீனா முதலிடத்தையும், வான் வழி பாதுகாப்பில் அமெரிக்கா முதலிடத்தையும், தரை வழி பாதுகாப்பில் ரஷ்யா முதலிடத்தையும் பிடித்துள்ளன.

வான் பாதுகாப்பில் சக்தி வாய்ந்த நாடாகத் திகழும் அமெரிக்காவிடம் 14,141 விமானங்களும், ரஷ்யாவிடம் 4,682 விமானங்களும், சீனாவிடம் 3,587 விமானங்களும் உள்ளன. தரை வழி தளவாடங்களில் முதலிடம் வகிக்கும் ரஷ்யாவிடம் 54,866 தளவாடங்களும், அமெரிக்காவிடம் 50,326 தளவாடங்களும், சீனாவிடம் 41,641 தளவாடங்களும் உள்ளன. கடல் பாதுகாப்பில் முதலிடம் வகிக்கும் சீனாவிடம் 406 போர்க்கப்பல்களும், ரஷ்யாவிடம் 278 போர்க்கப்பல்களும், அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தலா 202 போர்க்கப்பல்களும் உள்ளதாக மிலிட்டரி டைரக்ட் இணையதளம் குறிப்பிட்டிருந்தது. மேலும், உலகிலேயே அதிக ராணுவ படை பலம் வாய்ந்த நாடாக சீனாவை பட்டியலிட்டிருந்தது. அந்நாட்டுக்கு 100-க்கு 82 புள்ளிகளை வழங்கியிருந்தது.

அதேபோல, உலகின் முன்னணி வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்கா, பாதுகாப்பு படை பலத்தில் இரண்டாமிடத்தில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இத்தனைக்கும் தனது முப்படைகளுக்காக அமெரிக்கா ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டை ஒதுக்குகிறது. இதற்காக அந்நாட்டுக்கு 74 புள்ளிகள் என வகைப்படுத்தியிருந்தது. இதேபோல, ரஷ்யாவுக்கு 69 புள்ளிகள், பிரான்ஸுக்கு 58 புள்ளிகள், பிரிட்டனுக்கு 43 புள்ளிகள் என தெரிவித்திருந்தது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நாடுகளின் பட்ஜெட், ராணுவ வீரர்களின் செயலாற்றல், நாட்டின் மொத்த பரப்பளவு, கடல், நிலம், வான், அணு ஆயுத வளங்கள், படை வீரர்களின் சராசரி ஊதியம், பாதுகாப்பு தளவாட சாதனங்கள் ஆகியவை அடிப்படையில் இந்த புள்ளிகள் கணக்கிடப்பட்டிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், வலிமையான விமானப்படையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி இருப்பதாக தி வேர்ல்டு டைரக்டரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி ஏர்கிராஃப்ட் என்கிற அமைப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்க விமானப்படை 242.9 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2-வது இடத்தில் 142.4 புள்ளிகளுடன் அமெரிக்க கடற்படையும், 3-வது இடத்தில் 114.2 புள்ளிகளுடன் ரஷ்ய விமானப்படையும், 4-வது இடத்தில் 112.6 புள்ளிகளுடன் அமெரிக்க ராணுவமும், 5-வது இடத்தில் 85.3 புள்ளிகளுடன் அமெரிக்க கடலோர காவல்படையும் இருக்கின்றன. 69.4 புள்ளிகளுடன் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் சீனாவோ, 63.8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில்தான் இருக்கிறது. 8-வது இடத்தில் ஜப்பானும், 9-வது இடத்தில் இஸ்ரேலும், 10-வது இடத்தில் பிரான்ஸும் இருக்கின்றன. இதன் மூலம் சீனாவின் விமானப்படையை விட இந்தியாவின் விமானப்படை வலுவானதாக இருப்பது தெரியவந்திருக்கிறது.


Share it if you like it