அமெரிக்காவில் குருவிகளைப் போல பள்ளிக் குழந்தைகள் 19 பேரை சுட்டுக் கொன்ற கொடூரனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள உவால்டி நகரில் ராப் என்கிற பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை, இப்பள்ளியில் வகுப்புகள் தொடங்கிய சில மணித் துளிகளில் கையில் துப்பாக்கியுடன் கவச உடை அணிந்தபடி ஒருவன் உள்ளே நுழைந்திருக்கிறான். ஒரு வகுப்பறைக்குள் சென்றவன், அங்கிருந்த ஆசிரியர் மற்றும் குழந்தைகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். பின்னர், அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஆசிரியர் மற்றும் குழந்தைகள் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். இவ்வாறு மொத்தம் 100 ரவுண்டுகள் சுட்டிருக்கிறான். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த கொடூர இளைஞனை சுட்டுக் கொன்றனர். அவனுக்கு வயது 18 இருக்கும். பின்னர், காயமடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு உவால்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த தகவலை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த குழந்தைகளின் பெற்றோர், பள்ளியில் குவியத் தொடங்கினர். இவர்கள், கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கொலைகார இளைஞன் பள்ளிக்கு வருவதற்கு முன்பு தனது பாட்டியையும் சுட்டுக் கொன்று விட்டு வந்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளைஞனுக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. இதையொட்டி, 2 துப்பாக்கிகளை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறான் அந்த கொடூர இளைஞன் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை துப்பாக்கி பயன்படுத்துவது சர்வ சாதாரணமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால், நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நிகழாண்டு மட்டும் 215 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில், பள்ளிகளில் நடக்கும் 27-வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். கடந்த 2012-ம் ஆண்டு இதேபோல ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அமெரிக்க மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.