ஒன்று பட்ட இந்து சக்தி

ஒன்று பட்ட இந்து சக்தி

Share it if you like it

ஒன்று பட்ட இந்து சக்தி

நமது நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு இந்திய குடிமகனும், அவரவர் விரும்பிய மதங்களை பின்பற்றலாம், அவரவருக்குப் பிடித்த இறைவனை வணங்கலாம். நமது நாட்டு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26ன் படி வழங்கி உள்ள மதச் சுதந்திர அடிப்படையில், அவரவருக்குப் பிடித்த இறைவனை வணங்க, அனைத்து இந்திய குடிமகனுக்கும், தனிப்பட்ட உரிமை உண்டு.

எந்த ஒரு இறைவனையும் வழிபட, ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவருக்கும் அப்படி ஒரு சுதந்திரத்தை, நமது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக்கின்றது.

தண்டிக்கப் பட வேண்டியது :

“அனைவரும் சமம்” என்னும் மனோபாவமும், “எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஓர் இனம்” என பாரதியார் கூறியது போல, “நாம் அனைவரும் ஒன்றே” என்ற எண்ணம், எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஆனால் சிலர், ஒரு இறைவனை உயர்த்திப் பிடிப்பதற்காக, மற்ற தெய்வங்களை விமர்சனம் செய்வது என்பது, நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டிய குற்றமே.

ஆனாலும் சிலர், இந்து தெய்வங்களை மட்டுமே குறி வைத்து தாக்குவதுடன், இந்து மதம் சார்ந்த சம்பிரதாயங்களை மட்டுமே, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்து ஆண் – பெண் தெய்வங்களை மட்டுமே விமர்சனம் செய்வதுடன், இந்து மதம் சார்ந்தவைகளை மட்டுமே, குறி வைத்து தாக்குவது, இந்து மக்களிடையே மிகுந்த வேதனையைத் தருகின்றது.

மக்கள் சக்தி :

தனிப் பட்ட நபர்களோ அல்லது ஒரு பிரிவினரோ, அது போல செய்த போதே, தாங்கிக் கொள்ள முடியாத இந்து மத பக்தர்களுக்கு, தமிழக அரசும், சில இந்து மத சம்பிரதாயங்களுக்கு தடை விதித்தது, இந்து பக்தர்களுக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.

எனினும், ஒன்று பட்ட மக்கள் சக்தி, அதை மாற்றி அமைத்ததுடன், பழைய நடைமுறையையே பின்பற்ற, அது வழி அமைத்துத் தந்தது.

பட்டினப் பிரவேசம் :

அவரவர் குருவிற்கு அவரவர் சிஷ்யர்கள் மரியாதை செய்வது என்பது, நமது நாட்டில் இயல்பான ஒன்று.‌ தனது குரு துரோணாச்சாரியர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தனது வலது கையின் கட்டை விரலையே அறுத்துக் கொடுத்த சிஷ்யர் ஏகலைவன். அவரைப் போன்றே, எண்ணற்ற சிஷ்யர்கள், தங்களது குருவிற்காக, என்ன கேட்டாலும் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

மிகவும் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாகவே, “பட்டினப் பிரவேசம்” என்ற நிகழ்வு நடந்து வருகின்றது. இதன்படி, சிஷ்யர்கள் தங்களது குருமார்களை, பல்லக்கில் அமர வைத்து, அவர்களை சில தூரம் தூக்கிச் செல்வார்கள்.

இந்த நிகழ்வுகள் அனைத்துமே, யாரும் யாரையும் கட்டாயப் படுத்தாமல், அவர்களாகவே தானாக முன் வந்து, மகிழ்ச்சியுடன் செய்யும் வழக்கமான நடைமுறை.

இவ்வாறு பல்லக்கை சுமப்பவர்கள், அங்கேயே தங்கி இருந்து, குருவிற்கு சேவை செய்பவர்களாகவும் இருக்கலாம் அல்லது சிஷ்யர்களாகவும் இருக்கலாம் அல்லது ஆதினத்தின் பக்தர்களாகவும் இருக்கலாம். இந்த பெருமைக்குரிய நிகழ்வில், அனைத்து பக்தர்களும் கலந்து கொள்வது, எப்போதும் வழக்கமான நடைமுறை.

2022 ஆம் ஆண்டு, மே மாதம் 22 ஆம் தேதி, அவ்வாறு நடைபெற   இருந்த “தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம்” நிகழ்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் வருவாய்த் துறை தடை விதித்தது.

இது இந்து பக்தர்கள் இடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. உடனே பக்தர்கள், தங்களது எதிர்ப்பை, தமிழக அரசிற்கு தெரிவித்தனர். பல்லக்கைத் தூக்கும் அனைத்து பக்தர்களும், தங்களது விருப்பப் படி தான் தூக்குகிறார்கள் என்றும், விதிக்கப் பட்ட தடையை உடனே  நீக்க வேண்டும் என்றும், ஆதினத்தின் பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தமிழக பக்தர்களின் ஒன்று பட்ட சக்தியைக் கண்ட  தமிழக அரசு, அந்தத் தடையை நீக்கியதுடன், மீண்டும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி வழக்கம் போல நடைபெற அனுமதி அளித்தது. அதனால் நிகழ்ச்சியும், நல்ல படியாக நடந்து முடிந்தது.

கண்டித்த சிவனடியார்கள் :

சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தில்லை நடராஜரும், தில்லை காளியும் உலகின் மிகவும் புகழ் பெற்ற கடவுள். பல கோடி இந்து மக்கள் பலரும், விரும்பி வணங்கும் சிவ பெருமானையும், அவரது நடனத்தையும் மிகவும் ஆபாசமான முறையில், கீழ்த் தரமான வகையில், விமர்சனம் செய்தது “யூ டூ ப்ரூடஸ்” (U2 Brutus) என்ற யூ ட்யூப் வலைத் தளம். அதில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியவர், மைனர் விஜய் என்பவர்.

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த நடனத்தையும், அவரது அங்க உறுப்புகளையும் சம்பந்தப் படுத்தி, மிக இழிவாகப் பேசி, வீடியோ  பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் வெகுண்டு எழுந்த இந்து மத பக்தர்கள், மைனர் விஜய்க்கு எதிராக, பல புகார்களை அளித்தனர். எனினும், இதுவரை அவர், கைது செய்யப் படவில்லை.

இதனால் தமிழக அரசு மீது கோபம் கொண்டு, 2022 ஆம் ஆண்டு, மே மாதம் 23 அன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவன் அடியார்கள்  ஒன்று கூடி, அற வழியில் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும், சம்பந்தப் பட்டவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்து சிவனடியார்களும், பொது மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

வெற்றி பெற்ற இந்து சக்தி :

“கருப்பர் கூட்டம்” என்ற யூ டியூப் சேனல், 2020 ஆம் ஆண்டில், இந்து மதக் கடவுள்களை, மிகவும் தவறான வகையில் இழிவு படுத்தி, பல வீடியோக்களை வெளியிட்டது.

“தமிழ் கடவுள்” என போற்றப் பட்டு, பெரும் பான்மையான தமிழர்களால் வணங்கப் படும் முருகரையும், ஸ்ரீ பால தேவராய சுவாமிகளால் எழுதப் பட்ட கந்தர் சஷ்டிக் கவசத்தையும், மிகவும் கேவலமான முறையில் விமர்சனம் செய்து, பல இந்து மத தெய்வங்களைப் பற்றி, அவதூறான வீடியோக்களை “கருப்பர் கூட்டம்” என்ற யூ டியூப் சேனல் வெளியிட்டது.

இதனைக் கண்டு மிகவும் ஆத்திரம் அடைந்த தமிழக மக்கள், தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையிலும், உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையிலும், அற வழியில் மிகப் பெரியப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இதனால் பெரிதும் கலக்கம் அடைந்த அன்றைய ஆட்சியாளர்கள், சம்பந்தப் பட்ட நபரான சுரேந்திரனை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது.

மக்கள் எழுச்சி பெற்றதனாலேயே, அவர் கைது செய்யப் பட்டார் என, சமூக ஆர்வலர்கள் அப்போது தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

நமது நாட்டின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், “Right to freedom of religion” என சமயம் சார்ந்த உரிமையையும், சுதந்திரத்தையும் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கி உள்ளது. அதனை யாரும் தவறான வழியில் பயன்படுத்த, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது எனவும், அதனையும் மீறி யாரேனும் தவறாக பயன் படுத்தினால், தயவு தாட்சண்யமின்றி அவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் எனவும், சட்ட வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தனது கட்சியில் உள்ள தொண்டர்களில், 90 சதவீதம் பேர் இந்துக்களே என, முன்பு ஒரு முறை கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் அவர்கள், தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், தமிழக பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், தவறு செய்த யூ டியூப் சேனலை தடை செய்வதுடன், சம்பந்தப் பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பாரா?  கோரிக்கை வைத்த சிவனடியார்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?

அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டிய தமிழகத்தில், மத மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடும் நபரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, சட்டப்படி வழக்கு பதிவு செய்து, தண்டிக்கப் பட வேண்டும் என்பதே தமிழக பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு திருக்குறள்

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it