எதிர்வரும் காலங்களில் பங்குச் சந்தையில் நிஃப்டி 15,500 புள்ளிகளுக்கு கீழ் சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், 2024-ம் ஆண்டில் 26,000 புள்ளிகளை எட்டும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 ஆண்டுகால அடிப்படையில் நல்ல பங்குகளை வாங்கி லாபம்பெறலாம்.
பங்குச் சந்தையில் கடந்த 3-ம் தேதியன்று நிஃப்டி 16,600 புள்ளிகளுக்கு கீழ் முடிவடைந்தது. அதேபோல், பேங்கிங் நிஃப்டி 35,300 புள்ளிகளுக்கு கீழ் முடிவடைந்தது. இந்தியாவை பொறுத்தவரை, கொரோனாவுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் பல தடைகளை படிக் கற்களாக மாற்றி நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக, செல்போன் உற்பத்தியில் உலகின் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு துறையில் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தித் துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. தவிர, மின்சார வாகன பயன்பாடு மற்றும் உற்பத்தித் துறையில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, தற்போது, உலக அளவில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், கச்சா எண்ணெய் விலைவாசி உயர்வு காரணமாகவும் நமது முன்னேற்றத்தில் சிறிதளவு மந்தமடைந்து வருகிறது. நீடித்தது வரும் ரஷ்யா – உக்ரைன் போர் கூடிய விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, கச்சா எண்ணெய் விலை ஒரு நிலையான விலையில் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது. அதேசமயம், நமது நாட்டில் எத்தனாலை கலந்து பெட்ரோல் விநியோகிக்கும் முறை அதிகரிக்கும் நிலையில், பெட்ரோலிய பொருட்களின் விலை மிகபெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது.
சந்தையைப் பொறுத்தவரை, வரும் காலங்களில் நிஃப்டி 15,500 புள்ளிகளுக்கு கீழ் சரிவு ஏற்பட்ட வாய்ப்புள்ளது. ஆகவே, முதலீட்டாளர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 2024-ம் ஆண்டு நமது சந்தை 26,000 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளது. எனவே, இரண்டு வருட கால அடிப்படையில் நல்ல பங்குகளை வாங்க வேண்டும். குறிப்பாக, பேங்கிங் துறையில் எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட், சிட்டி யூனியன் போன்ற வங்கிகளின் பங்குகள் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது.
இது தவிர, டிபன்ஸ் உற்பத்தித் துறையில் மிஸ்ரா தாத்து நிகாம் லிமிடெட், பராஸ் டிபன்ஸ், பாரத் டைனமிக்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் போன்ற பங்குகளை வாங்கலாம். ஐ.டி. துறையில் டி.சி.எஸ்., விப்ரோ, ஹாப்பிஎஸ்ட் மைன்ட்ஸ், கெல்டான் டெக்னாலஜிஸ் மற்றும் சொனாட்டா சாப்ட்வேர் போன்ற பங்குகள் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது. கட்டுமானத் துறையில் எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர், கொல்டே பட்டேல், ஐ.பி.ஆர். ரியல் எஸ்டேட் போன்ற பங்குகளை வாங்கலாம். அதேபோல, மின்சாரம் சார்ந்த மற்றும் மின்சார வாகன உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் மற்றும் பேக்கேஜிங் துறைகளில் பாலி பிளக்ஸ், யூ பிளக்ஸ், ஜிந்தால் பாலி மற்றும் காஸ்மோ பிலிம்ஸ் போன்ற துறைகளில் முதலீடு செய்து லாபம் அடையலாம்.