மேடையில் தூங்கிய ‘பட்டாம்பூச்சி’ பாப்பா!

மேடையில் தூங்கிய ‘பட்டாம்பூச்சி’ பாப்பா!

Share it if you like it

பட்டாம்பூச்சி வேடமிட்டு பாடலுக்கு நடனமாட வேண்டிய குட்டிப் பாப்பா ஒன்று, அசதியில் மேடையிலேயே படுத்துத் தூங்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே, குழந்தைகள் என்றாலே குதூகலமதான். குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு, பார்த்து ரசித்து சிரிக்க வைக்கும் வகையில்தான் இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் வைத்தால் கேட்கவே வேண்டாம். வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்கலாம். அந்தளவுக்கு குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், பாவனைகள் பார்வையாளர்களை ரசித்து சிரிக்க வைக்கும். தற்போது, உலகமே இணையமாகி விட்ட நிலையில், குழந்தைகள் செய்யும் குறும்புகளை, பெற்றோர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்களை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், சீனாவிலும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சீனாவின் சாங்கிங் என்ற நகரத்திலுள்ள ஒரு பள்ளியில் விழா நடந்தது. இதையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் பட்டாம்பூச்சியைப் போன்ற உடையணிந்து, கைகளை அசைத்து பட்டாம்பூச்சி பறப்போல நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நடனமாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் திடீரென மேடையிலேயே படுத்தது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் அக்குழந்தை ஏதோ புதுவித நடனம் செய்யப்போகிறது என்று நினைத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக அக்குழந்தை எதுவுமே செய்யாமல் அப்படியே படுத்துக் கிடந்தது. இதன் பிறகுதான் அக்குழந்தை தூங்கி விட்ட விஷயம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே 1 லட்சத்துக்கும் மேலானோர் வீடியோ பார்த்ததோடு, பல்லாயிரணக் கணக்கானோர் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்கள். அப்படி இந்த வீடியோவை பகிர்ந்தவர்களில் பலரும், 3 வயது குழந்தையைக்கூட இந்த ஸ்ட்ரெஸ் விட்டுவைக்கவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்றும், எங்கள் அலுவலகத்தில் பலரும் இப்படித்தான் தூங்குவார்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.


Share it if you like it