சுதந்திரப் போராட்ட வீரர் பி. எஸ். குமாரசாமி ராஜா

சுதந்திரப் போராட்ட வீரர் பி. எஸ். குமாரசாமி ராஜா

Share it if you like it

பி. எஸ். குமாரசாமி ராஜா

குமாரசாமி ராஜா அவர்கள் 1898 ஆம் ஆண்டு, இராஜபாளையத்தில் பிறந்தவர். மிகச் சிறு வயதிலேயே தாய் தந்தையரைப் பறி கொடுத்தார். சிறு வயது முதலே, வெளிப்படையான பேச்சும், இரக்க சிந்தனையும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

பள்ளியில் பயிலும் காலத்திலேயே, அவருக்கு அரசியலில் மிகுந்த நாட்டம் இருந்தது. 1919ல், தனது படிப்பை நிறுத்தி விட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1934ல், முதன் முதலில் தேர்தலில் நின்ற அவர், பதிவான ஓட்டுகளில் 98.5 சதவிகிதம் பெற்று, பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1936ல் முதல் முறையாக, சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சுதந்திரப் போராட்டம், கதர், தீண்டாமை ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் தீவிரப் பங்கு பெற்றுள்ளார்.

அவர் முதல்வர் பதவி ஏற்றது 1949 ஏப்ரலில்; 1952 ஜனவரி வரை பதவியில் இருந்தார். நீதித் துறையில் அவர் ஆற்றிய சீர்த்திருத்தங்கள் குறிப்பிடத் தக்கவை. ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் மின்சாரத்தைத் தேசியமயமாக்கியதும், இராஜபாளையத்தைத் தொழில் நகரமாக்க வழிகோலியதும் இன்றும் நினைவு கூறப்பட்டு வரும் விஷயங்கள்.

இராமநாதபுரம் மாவட்டக் கோவில்கள் பலவற்றைப் புனரமைக்க ஏற்பாடுகள் செய்தது போற்றத்தக்கது. 1954 முதல் 1956 வரை, ஒரிஸ்ஸாவின் கவர்னராக இருந்தார். உடல்நிலை மோசமடைந்ததால், பதவியை விட்டு விலகி, ஒய்வெடுக்கலானார்; 15.3.57-இல் இறைவன் திருவடி சேர்ந்தார்.

வாழ்நாள் முழுவதும் தமக்கென்று வாழாது, பிறர்க்கென வாழ்ந்தவர். இராஜபாளையத்தில், தமிழையும், இசையையும் வளர்த்து வரும் “காந்தி கலை மன்றம்” அவரது முயற்சியால் உருவானதே. தனது வீட்டையே அதற்கு வழங்கி விட்டு, தான் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு, அதில் குடியேறினார், அதுபோலவே காங்கிரஸ் பொன் விழா மைதானமும். ஏறக்குறைய தனது சொத்து முழுவதையுமே, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அவர் பேச்சு வெளிப்படையாகவும், கறாராகவும் இருக்கும். எவ்வளவு பிடித்தமானவர்களாக இருந்தாலும் சரி, தவறு செய்தால் முகத்தில் அடித்தாற் போல அதைச் சுட்டிக் காட்டி விடுவார். அதே நேரத்தில், கஷ்டப் படுபவர் என்று தெரிந்தால், எந்த உதவியையும் செய்யத் தயாராக இருப்பார். இந்த இரண்டாலுமே, தனக்கு என்னென்ன பாதிப்பு வரும் என்றெல்லாம் அவருக்கு யோசிக்கத் தெரியாது.

மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அதிலும் அவருடைய நண்பர்களோ, சகாக்களோ அவரைக் கேலி செய்து, ‘ஜோக்’ சொன்னால், அதை மிகவும் ரசிப்பார். அவர் சிரிப்பே இடி போல இருக்கும். மனித நிர்மாணப் பணி தான் முதன்மைத் தேவை என்பது அவர் கருத்து. “உன்னை நேர்மையாளனாக ஆக்கிக் கொள். ஆக்கி விட்டால், உலகின் அயோக்கியர்களில் ஒருவன் குறைந்து விட்டான் என, நீ உறுதியாக நம்பலாம்” என்ற ‘கார்லைல்’ன் வரிகள், அவருக்கு மிகவும் பிடித்தமானவை.


Share it if you like it

One thought on “சுதந்திரப் போராட்ட வீரர் பி. எஸ். குமாரசாமி ராஜா

  1. வரலாறு மறந்த மாவீரன் மற்றும் மெட்ராஸ் மாகாண பிரதமருக்கு ஒரு உருவப்படத்தை திறக்க 08.07.2022 அன்று அறவழி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது அனைவரின் ஆதரவும் வேண்டுகிறோம். மிக்க நன்றி .

Comments are closed.