ராஜஸ்தான் மாநிலம் ஓகாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வரும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில், இலவசக் கல்வி கொடுப்பதாக ஏமாற்றி 12 பெண் குழந்தைகளை அழைத்து வந்த கிறிஸ்தவ பாதிரியாரை, ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாக்குளம் அருகே பெரும்பாவூரில் பெந்தேகோஸ்தே தேவாலயம் அமைந்திருக்கிறது. இதன் போதகராக இருப்பவர் ஜேக்கப் வர்கீஸ். இங்கு, கருணாபவன் என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றும் இயங்கி வருகிறது. இதன் இயக்குனரும் போதகர் ஜேக்கப் வர்க்கீஸ்தான். இந்த சூழலில், கடந்த 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 11 பெண் குழந்தைகளும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திருக்கிறார்கள். அக்குழந்தைகளுடன் 4 பெரியவர்களும் இருந்திருக்கிறார்கள். இது அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த சக பயணிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, அந்த பயணி குழந்தைகளுடன் வந்த பெரியவர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது, அவர்களில் இருவர் தாங்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் எனவும், கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் இலவசமாக படிக்க வைப்பதாகச் சொன்னதால், குழந்தைகளை அழைத்து வருவதாகவும் கூறியிருக்கிறார்கள். அதேசமயம், மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் வரவில்லை. இதனால், அப்பயணியின் சந்தேகம் உறுதியானது. எனவே, இதுகுறித்து எர்ணாகுளம் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ரயில் எர்ணாகுளத்தில் வந்து நின்றதும் சரியாக அக்குழந்தைகள் பயணித்து பெட்டிக்கு வந்தனர் ரயில்வே போலீஸார். அவர்களிடம் விசாரித்தபோது, இலவச கல்விக்காக அழைத்து வந்த விவரத்தைக் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த பதிலில் ரயில்வே போலீஸாருக்கு திருப்தி இல்லை. எனவே, தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியிருக்கிறார்கள். இது போலீஸாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. மேலும், பெரியவர்களில் இருவர் மட்டுமே குழந்தைகளின் பெற்றோர் என்பதும், மற்ற இருவரும் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்ததாக பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 370-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், பாதிரியாருக்கு உடந்தையாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லோகேஷ்குமார், ஸ்யாம் லால் ஆகியோரையும் கைது செய்தனர்.
இதன் பிறகு, இதுகுறித்து லோக்கல் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, போதகர் ஜேக்கப் வர்கீஸ் நடத்திவரும் கருணா பவன் அறக்கட்டளைக்கு சட்டப்படி அங்கீகாரமே இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு, கோழிக்கோட்டில் உள்ள குழந்தைகள் நலக்குழு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர், அக்குழந்தைகளின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் வந்தவுடன் குழந்தைகளை ஒப்படைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.