ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. அப்பாவி காஷ்மீர் பண்டிட்கள், அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, பாதுகாப்புப் படையினர் ரெகுலராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை என்கவுன்ட்டர் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பதோடு, ஏராளமானோர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் இத்தகைய தேடுதல் வேட்டைக்கு ஆக்செல் என்கிற மோப்பநாய் பெரிதும் உதவி வருகிறது.
இந்த நிலையில், பாராமுல்லா மாவட்டத்தில் வானிகாம் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று பயங்கரவாத தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். இவர்களுடன் ஆக்செல் மோப்ப நாயும் ஈடுபட்டிருந்தது. அப்போது, திடீரென பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஆக்செல் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால், படுகாயமடைந்த மோப்பநாய் ஆக்சல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
இதைத் தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில், ஆக்சலின் தலையில் 3 குண்டுகள் பாய்ந்திருந்ததும், கால் பகுதியில் 10 இடங்களில் காயங்களும் மற்றும் சிராய்ப்புகளும் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மோப்ப நாய் ஆக்சலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை பாராமுல்லா மாவட்டத்திலுள்ள ராணுவ வீரர்கள் ஆக்சல் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.