தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஒரு ஆய்வை நடத்தியது. அதாவது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எந்தளவுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த ஆய்வு. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 24 மாவட்டங்களிலுள்ள 386 ஊராட்சிகள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மேற்கண்ட 386 ஊராட்சிகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 400 தன்னார்வலர்கள் இந்த கள ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, சுமார் 17 வகையான அடக்குமுறைகள், பட்டியலினத் தலைவர்கள் மீது கையாளப்பட்டிருக்கிறது. இதிலும், பெண் பட்டியலினத் தலைவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ஜாதி ரீதியிலான துன்புறுத்தல்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கிராம சபைக் கூட்டங்களை நடத்த பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பதிவேடுகளை கையாள அனுமதி இல்லை. துணைத் தலைவர்களின் ஒத்துழைப்பின்மை என பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 42 ஊராட்சிகளில் பட்டியலினத் தலைவர்களின் பெயர்ப் பலகையைக் வைக்கக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சாவிகளை வைத்திருக்கும் உரிமையும் வழங்கப்படவில்லை. மேலும், 22 ஊராட்சி மன்றங்களில் பட்டியலின தலைவர்களுக்கு இருக்கை வசதி இல்லை. அவ்வளவு ஏன், ஊராட்சி மன்ற அலுவலங்களில் அமரக்கூட உரிமை இல்லை. எல்லாவற்றும் மேலாக, 20 ஊராட்சி மன்றங்களில் பட்டியலின தலைவர்கள், எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுதான் உச்சக்கட்ட கொடுமை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு முடிவு ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளியானது. மேலும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் என்னடா இது பெரியார் மண்ணுக்கு வந்த சோதனை என்று கலாய்த்து வருகிறார்கள். மேலும், வாய்கிழிய சமூக நீதி பேசும் தி.மு.க. ஆட்சியில், வெறும் பெயரளவில் மட்டுமே சமூகநீதி இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, தமிழகத்தில் அமர்ந்து கொண்டு உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது, பீகாரில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கும் சிலர், தமிழகத்தில் அனைவரும் சம உரிமையோடு வாழ்ந்து வருவதாக மாயையில் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கடுமையாக சாடி இருக்கிறார்.