திருவாவடுதுரை ஆதின செங்கோலும் பாரத சுதந்திரமும்

திருவாவடுதுரை ஆதின செங்கோலும் பாரத சுதந்திரமும்

Share it if you like it

திருவாவடுதுறை ஆதீனம் சித்தாந்த சைவ மடங்களில் மிகத் தொன்மையானது.பொயு 15 ம் நூற்றாண்டின் இறுதியில் மூவலூரில் பிறந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரால் துவங்கப்பட்டது.ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார்.இன்று 24 வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

விஜயநகர அரசு,நாயக்கர் அரசு,தஞ்சாவூர் மராட்டிய அரசு,திருவிதாங்கூர் ராஜ்ஜியம்,சேதுபதி மன்னர்கள் என எல்லா அரச குடும்பங்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு.வேதாகமத்தை – பண்டார சாத்திரங்களை – திருமுறைகளைக் கொண்டு சைவ சமயத்தை பரவச்செய்யும் பொறுப்பு ஆதீனங்களிடமே உள்ளது..

ஆதீனம் மற்றும் இதர மடங்கள் எல்லாமே தங்கள் சம்பிரதாயத்தை காக்கிற அளவிற்கு இந்த பண்பாட்டையும்,நிலத்தையும் காக்கிற பொறுப்பையும் பெற்றுள்ளார்கள்.அரசர்களை வழிநடத்தவும்,அவர்கள் தர்மத்தை மீறும் சுட்டிக்காட்டவும்,இந்த நிலத்தில் வேதாகம தர்மம் நிலைத்து செழிக்கவும் மடாதிபதிகளின் பங்கு ஈடுஇணையற்றது..

அரசர் காலங்களோடு ஆதீனங்களின் பணி அரசில் முடிந்துவிட்டது என்றில்லை.எந்த வழியில் ஆட்சி நடந்தாலும்,நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அதில் மடாதிபதிகளின் பங்கு பெரிது.இப்படித்தான் பாரதநாடு சுதந்திரம் பெற்று ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு நேரிடையாக இருந்தது.

1947 ல் பாரதநாடு விடுதலை அடைந்தபோது அதை ஆங்கிலேயரிடம் பெற்றுக்கொள்வதில் ஒரு பாரம்பரிய அடையாளம் இருக்க வேண்டுமென சிந்தித்து,திரு.ராஜாஜி அவர்கள் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்பு கொள்கிறார்.விஷயத்தை சொன்னவுடன் சுவாமி புரிந்து கொண்டு,தன் உடல்நிலை முடியாத நிலையிலும் சில ஆணைகளை உடனே பிறப்பிக்கிறார்..

சென்னையில் பிரபலமாக உள்ள உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னமான ரிஷப அமைப்புடன் கூடிய தங்கச்செங்கோலை செய்யச் சொல்கிறார்.உடனே,ஆதீன தம்பிரானான குமாரசாமி தம்பிரானையும்,ஆதீன ஓதுவார் மாணிக்க ஓதுவார் அவர்களையும்,ஆதீனத்தின் நாதஸ்வர வித்வான் திரு.ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும் அந்த செங்கோலுடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்.

டெல்லியில் சுதந்திரம் பெற்றதை பறைசாற்றும் விதம்,அந்த செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஞானசம்பந்த பெருமானின் ‘வேயுறு தோளிபங்கன்’ என்கிற தேவாரப்பாடல் ஒலிக்க! “அரசாள்வர் ஆணை நமதே” என்ற வரிகள் மிகுந்தொலிக்க அந்தச் செங்கோல் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வினை திருவாவடுதுறை ஆதீனத்தில் இதன் வரலாற்றுடன் படமாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 14 ந்தேதி இரவு 11 மணிக்கு இந்த பூஜைகள் நடந்து,அன்றிரவு சுதந்திரம் வழங்கப்பட்டதை அறிவித்த அடையாளமாக பண்டித நேரு செங்கோலை பெற்றுக் கொண்டார் என அனைத்து ஆங்கில பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தகவலை உறுதி செய்யும் விதம் நிகழ்வொன்று உள்ளது. 31 – 1 – 1954 ம் வருடம்,திருவாவடுதுறை ஆதீனத்தில் 21 வது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமண்ய தேசிகரால் துவங்கி வைக்கப்பட்ட திருமந்திர மாநாட்டின் நான்காவது நாள் நிகழ்வில் அன்றைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.வேங்கடசாமி நாயுடு கலந்து கொண்டு பேசினார்..

திரு.ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த போது வேங்கடசாமி நாயுடு அவர்களே அறநிலையத்துறை அமைச்சர்.இவர் தீவிர வைணவராக இருந்த போதும் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத சமயங்களை எல்லாம் பெரிதும் மதித்து போற்றினார்.அதுமட்டுமில்லாமல் சமண,பௌத்த மதங்கள் மீதும் பெரிய மரியாதை வைத்திருந்தது அவருடைய பேச்சில் வெளிப்பட்டுள்ளது.

வேங்கடசாமி நாயுடு அவர்கள் 3 – 2 – 1954 அன்று மாலை திருமந்திர மாநாடு பற்றியும்,திருவாவடுதுறை ஆதீன சமய மற்றும் தேசப்பணிகளை பற்றி வியந்து போற்றி பேசியுள்ளார்.அவர் பேசியதாவது..👇

|| இந்தியாவின் சக்தியை வைத்துக் கொண்டு நேரு ஜி உலகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறார்.இந்தியா சுயேச்சையடைந்து ராஜ்யபாரம் வகித்த நாளன்று இவ்வாதீனத்திலிருந்து செங்கோல் அனுப்பப்பட்டது.நாங்கள் எல்லோரும் அப்போது அங்கே இருந்தோம்.மிகவும் சந்தோஷப்பட்டோம்,சந்நிதானத்தின் பூரண ஆசீர்வாதத்துடன் அந்தச் செங்கோலை வைத்துதான் இப்போது அரசாங்கம் நடைபெறுகிறது.சரியாக நடக்க வேண்டும் என்பதே எங்கள் பேரவாவும்,பயமுமாகும்..|| – (திருமந்திர மாநாட்டு மலர் 1 – பக்கம் 45)

மேற்கண்ட உரையில் அறநிலைத்துறை அமைச்சர் வேங்கடசாமி நாயுடு அவர்கள் மிகத்தெளிவாக நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதையும்,அந்த செங்கோலை வைத்துதான் தேசத்தை வழிநடத்துகிறோம்,நீதிப்பரிபாலனம் செய்கிறோம்.எனவே,அது சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலையும் முன் வைக்கிறார்.

இன்றும் இந்த தேசத்தை முன்னின்று வழி நடத்த வேண்டிய அந்த ரிஷப செங்கோல்,பிரயாக்ராஜ் நகரில் நேருவின் நினைவாலயமான அவரது வீடான ஆனந்தபவனில் கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதாக ஒரு தகவல் சொல்கிறது.இது உண்மையென்றால் அதை இந்திய அரசு மீட்டு பிரதமர் அலுவலகயை அலங்கரிக்கும் விதம் செய்ய வேண்டுமென்பது தமிழர்களின் வேண்டுகோளாகும்.நிற்க.

பாரதநாடு ரிஷிகளாலும்,முனிவர்களாலும்,சித்த புருஷர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.எந்த கேடும் நமை வீழ்த்தாமல் தடுக்க கேடயமாக இருப்பது நமது ஆன்மீக அருட்கொடையே.சமயத்தை உயிராகவும்,பண்பாட்டையும் இந்த நிலத்தையும் இரு கண்களாகவும் பாவிக்கிற மடங்களில் ஒன்று திருவாவடுதுறை ஆதீனம் என்பது வரலாறு.

1962 ல் பாரதத்திற்கும் சீனாவுக்கு இடையே நடந்த கொடும்போரின் போது,அன்றைய தமிழக முதல்வர் திரு.காமராஜர் அவர்களை ஆதீனத்திற்கு அழைத்து 3315 கிராம் தங்கத்தையும்,₹65000 ரொக்க பணத்தையும் வழங்கினார் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமண்யதேசிகர்.ஆக என்றும் தேசநலத்தினையும்,அதன் பீடுநடையையும் விரும்புவதே ஆதீனத்தின் நோக்கம்.


Share it if you like it