ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்து பண்டிட்களுக்கு நேரிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பயங்கரவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் சேர்ந்து மிகப்பெரிய இனப்படுகொலையையே நடத்தி இருக்கிறார்கள். இதனால், உயிருக்கு பயந்து சொத்து பத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு, காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்தனர். அப்போது, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இல்லாததால், இந்த விஷயம் வெளியுலகுக்கு தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற திரைப்படம் வெளியான பிறகுதான், காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களுக்கு நேர்ந்த கொடுமை, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. இதன் பிறகு, ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்கள், தங்களது சொத்து பத்துக்களைத் தேடி மீண்டும் காஷ்மீருக்கே படையெடுத்தனர். இந்த சூழலில்தான், கடந்த 6 மாதங்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. அதேபோல, காஷ்மீர் மாநில அரசில் பணிபுரியும் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 7 பண்டிட்களும், 2 போலீஸாரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதை கண்டித்து காஷ்மீர் பண்டிட்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஊரை காலி செய்து விட்டு மீண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையிதான், காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் மீது பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஷோபியான் மாவட்டத்தின் சோடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில், பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் பிண்டுகுமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.