வீடு கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால், இன்று வரை தனக்கு வீடு கிடைக்கவில்லை என வேலம்மாள் பாட்டி உருக்கமுடன் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கீழகலங்கடி பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவருக்கு, வயது 91. கடந்த, ஆண்டு ஜீன் மாதம் இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டது. அந்த வகையில், 2,000 ரூபாய் பணம் பெற்ற மகிழ்ச்சியில், பாட்டி கொடுத்த போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து இருந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் வேலம்மாள் பாட்டியை தலைமை செயலகத்திற்கு அழைத்து பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரி, மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, முதல்வரை சந்தித்து தனக்கு வீடு வேண்டும் என பாட்டி கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு, முதல்வர் நிச்சயம் வீடு வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பாட்டிக்கு வீடு கிடைத்தபாடு இல்லை. இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தனது இயலாமையை எடுத்து கூறி தனக்கு உடனே வீடு ஒதுக்குமாறு முறையிட்டு இருக்கிறார். இதற்கு, ஆட்சியரும் முதல்வர் ஸ்டாலின் போல வாக்குறுதி வழங்கி அனுப்பி வைத்து இருக்கிறார். இந்த நிலையில், தனக்கு வீடு கிடைக்கவில்லை என வேலம்மாள் பாட்டி, உருக்கமுடன் முதல்வரிடம் வேண்டுகோள் வைத்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
’போட்டோவிற்கு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என நெட்டிசன்கள் முதல்வருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.