லால் சிங் சத்தா திரைப்படத்தில், இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்று பிரபல நடிகை மீரா சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. இது 1994-ம் ஆண்டு வெளியாகி, 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்ற ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. குறிப்பாக, தனது அனைத்து திரைப்படங்களிலும் ஹிந்து தெய்வங்களையும், சாமியார்களையும் இழிவுபடுத்தி காட்சிகளை அமைப்பதுபோல, இப்படத்திலும் சில காட்சிகளை அமைத்திருக்கிறார் அமீர்கான். இதனால் கொதித்தெழுந்த ஹிந்துக்கள், பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா என்று ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டாக்கினர். மேலும், இப்படத்தில் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகளையும் வைத்திருக்கிறார் அமீர்கான். இதுவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக, ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியடைந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், லால் சிங் சத்தா திரைப்படத்தில் இந்திய ராணுவம் குறித்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் தவறானவை என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ராவின் உறவினரும், நடிகையுமான மீரா சோப்ரா. இவர், தமிழில் நிலா என்கிற பெயரில் ‘அன்பே ஆருயிரே’, ‘மருதமலை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். லால் சிங் சத்தா படம் குறித்து மீரா சோப்ரா கூறுகையில், “28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் லாஜிக் பற்றி, அந்தக் காலத்தில் மக்கள் எதுவும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், தற்போதைய காலமே வேறு. ஆகவே, இப்படத்தில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. இதற்காக லால் சிங் சத்தா (அமீர்கான்) ஏன் 4 வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. நான் உண்மையான தேசப்பற்று உடையவள். இப்படத்தில் நம் ராணுவத்திற்கு எதிராகக் காண்பிக்கப்படும் காட்சிகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. இந்திய ராணுவத்தில் நடக்காத சில விஷயங்களை இப்படத்தில் காட்டியிருக்கின்றனர். தவிர, அடிப்படையிலேயே சில தவறான கருத்துகளையும் முன்வைத்திருக்கின்றனர்” என்று கூறியிருக்கிறார்.