திருச்சி அருகே திருட்டு மண் லாரியை சிறைப்பிடித்த பா.ஜ.க. பிரமுகர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் உண்மையான தலைவர். அவரால்தான் மணல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
திருச்சி மாவட்டம் செவலூர் ஊராட்சிக்கு உட்பட்டது குதிரைக்குத்திபட்டி கிராமம். இக்கிராமத்துக்கு அருகில் குத்துக்கல்மேடு என்கிற சிறிய மலைக்குன்று இருக்கிறது. இந்த மலைக்குன்றில் இருந்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர், கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக திருட்டுத்தனமாக செம்மண் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் மண் வளம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் கருதினார். ஆனால், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளை எதிர்த்துக் கேட்கும் தைரியம் கிராம மக்கள் யாருக்கும் வரவில்லை.
இதையடுத்து, குதிரைக்குத்திபட்டியைச் சேர்ந்த பா.ஜ.க. தொழில்துறையின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன், அதே ஊரைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் மோடி சுதாகர் என்கிற சுதாகர் ஆகியோர் செம்மண் லாரிகளை மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர். ஆனால், நள்ளிரவு நேரத்தில் கிராம மக்கள் அயர்ந்து தூங்கும் சமயத்தில் லோடு அடித்ததால், பிடிக்க முடியவில்லை. இந்த சூழலில், நேற்று பகலில் 5 லாரிகளில் செம்மண் லோடுகள் ஏற்றிக் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த கண்ணனும், சுதாகரும் லாரிகளை மடக்கிப் பிடித்து முற்றுகையிட்டனர். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் உண்மையான தலைவர். அவரால்தான் மண் கடத்தலை தடுக்க முடியும். ஆகவே, அவர் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மணப்பாறை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதேபோல, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலமும் சம்பவ இடத்துக்கு வந்தார். ஆனால், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி மட்டும் வரவில்லை. இதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில், மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் சிப்காட் அமைப்பதற்காகவே மண் அடிப்பதாகவும், ஆகவே, ஓரிரு நாட்கள் மட்டும் மண் அடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வெங்கடாசலம் ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் லாரிகளை அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.