காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒ்ருவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். சோனியா காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, அவருக்கு தீவிர ஆலோசகராக இருந்தார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படும் உட்கட்சிப் பிரச்னைகளை தீர்ப்பதிலும், ஆட்சி மாற்றத்தில் ஏற்படும் சிக்கல் உள்ளிட்டவற்றையும் தீர்த்து வைப்பதில் வல்லவர் குலாம் நபி ஆசாத். ஆனால், திடீரென காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினார். அதாவது, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜி 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் முக்கியமானவராக இருந்தார்.
இதனால், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்த பிறகு, அவருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த அவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசி வந்தார். இதனிடையே, ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குலாம் நபி ஆசாத்தை சமீபத்தில் நியமித்தது காங்கிரஸ் தலைமை. ஆனால், இது தன்னை சிறுமைப்படுத்துவதுபோல இருப்பதாகக் கூறி, நியமித்த சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்தார் குலாம் நபி ஆசாத். அதோடு, அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். இதனால், காங்கிரஸ் தலைமைக்கும் குலாம் நபி ஆசாத்துக்கும் இடையே மோதல் முற்றியது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகி, அக்கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து, தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை எழுதி இருக்கிறார் குலாம் நபி ஆசாத். அக்கடிதத்தில், ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ராகுல் காந்தியால்தான் கட்சியின் ஆலோசனை, திட்டமிடல் என அனைத்து அமைப்புகளும் தகர்ந்து விட்டதாகக் குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வர முடியாத சூழலை எட்டி இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.