ஜூடோவில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனை அசத்தல்!

ஜூடோவில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனை அசத்தல்!

Share it if you like it

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை லிந்தோய் சனம்பம் தங்கப் பதக்கம் பெற்று, பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

சமீப காலமாகவே, ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா ஜொலித்து வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்தியா வென்று, பட்டியலில் 48-வது இடத்தை பிடித்தது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆனால், இதுவரை ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில்லை.

இந்த நிலையில்தான், உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லிந்தோய் சனம்பம் தங்கப் பதக்கம் வென்று பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். இப்போட்டித் தொடர் போஸ்னியா நாட்டின் தலைநகர் சரஜேவாவில் நடந்து வருகிறது. இதில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 16 வயதே நிரம்பிய இந்திய வீராங்கனை லிந்தோய் சனம்பம் பங்கேற்றார். 57 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில், லிந்தோய் சனம்பம், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வசா அரியைச் சந்தித்தார். இதில், அபாரமாக ஆடி வசா அரியை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

இதன் மூலம், உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது. தங்கப் பதக்கம் வென்ற லிந்தோய் மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரைச் சேர்ந்தவர். விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்டவர். லிந்தோய் பேசும்போது, “எனது உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த வெற்றி மூலம் கிடைத்த மகிழ்ச்சியை நான் மட்டுமே அறிவேன்” என்று கூறியிருக்கிறார். அதேபோல, 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் அளவிலான தொடரில் லிந்தோய் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்தாண்டு நவம்பர் மாதம் சண்டீகரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் லிந்தோய் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தவிர, கடந்த ஜூலை மாதம் நடந்த ஆசிய ஜூனியர் ஜூடோ போட்டியிலும் தங்கம் வென்றார். தங்கம் வென்ற லிந்தோய் சனம்பமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Share it if you like it