ஏற்கெனவே திட்டமிட்டபடி, எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில், சீனப் படைகள் அத்துமீற முயன்றன. இதனால், பாங்காக் ஏரி பகுதியில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 2 வருடங்களாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தற்போது இரு நாடுகளும் எல்லைகளில் படைகளை விலக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கின்றன.
அந்த வகையில், எல்லையில் 15-ம் எண் ரோந்துப் பகுதிகளான காக்ரா, ஹாட்ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 8-ம் தேதி துவங்கிய இப்பணி, 12-ம் தேதிக்குள் முடியும் என்று கூறப்பட்டது. கடந்த 2 நாட்களாக கிழக்கு லடாக்கில் எல்லைப் பகுதி பாதுகாப்பு தொடர்பாக, ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேரில் ஆய்வு செய்தார். பின்னர், டெல்லி திரும்பிய அவர், நேற்று நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் பேசுகையில், ”எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது, ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.