தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் டி.ஆர்.பாலுவின் செருப்பை தொண்டர் ஒருவர் தூக்கி வந்து காலில் அணிவித்த விவகாரம், பெரும் சர்ச்சைக் கிளப்பி இருக்கிறது. அதேசமயம், இதுதான் தி.மு.க.வின் சுயமரியாதையா, சமூகநீதியா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, எதற்கெடுத்தாலும் சுயமரியாதை, சமூகநீதி என்று பேசுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைத்தும் இவற்றுக்கு நேர்மாறானதாகவே இருக்கும். அதாவது, சமூகநீதி பேசும் தி.மு.க. தலைவர்களில் பலரும், பட்டியல் சமூகத்தினரை ஜாதியைக் குறிப்பிட்டு பேசி அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, அமைச்சர் ராஜகண்ணப்பன், பட்டியலின அதிகாரி ஒருவரை அசிங்கமாகப் பேசினார். அமைச்சர் பொன்முடியோ, மேடையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவரை ஜாதியைச் சொல்லி பேசினார். அமைச்சர் துரைமுருகன், மேடையில் பறையர் சமூகத்தை இழிவாகப் பேசினார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேபோல, நீர்நிலைகளை பார்வையிடும்போதோ அல்லது வெள்ள பாதிப்புகளை பார்வையிடும்போதோ, அமைச்சர்களின் செருப்பை தொண்டர்கள் தூக்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியை ஆய்வு செய்ய வந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், படகிலிருந்து கீழே இறங்கி கடல்நீரில் கால்வைக்க தயங்கிய நிலையில், அவரை தி.மு.க. பிரமுகர் துாக்கி வந்து கரையில் சேர்த்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான், தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் செருப்பை தொண்டர் ஒருவர் தூக்கி வந்து காலில் மாட்டிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்வதற்காக, கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் தலைவராக ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், புதிய நிர்வாகிகள் அனைவரும், மேடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தச் சென்றனர். அப்போது, அனைவரும் தங்கள் காலில் இருந்த செருப்பை கழட்டிப் போட்டனர். மரியாதை செலுத்திய பிறகு மீண்டும் செருப்பை அணிந்து கொண்டு மேடையில் வந்து அமர்ந்தனர். ஆனால், டி.ஆர்.பாலு மட்டும் செருப்பை அணிய மறந்து விட்டு, மேடைக்குச் சென்று விட்டார். ஆகவே, கீழே கிடந்த செருப்பை எடுத்து வரும்படி கூறியிருக்கிறார். உடனே, தொண்டர் ஒருவர் கையில் செருப்பைத் தூக்கி வந்ததோடு, அதை பாலுவின் காலில் அணிவித்தும் விட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதைப் பார்த்த பலரும் சுயமரியாதை பற்றி வாய்கிழியப் பேசும் தி.மு.க.வின் லட்சணம் இதுதானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், செருப்பை தூக்கி வந்து காலில் அணிவித்தது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தொண்டர் என்று கூறப்படுகிறது. ஆகவே, சமூகநீதி பற்றி பேசும் தி.மு.க. சமூகநீதியைப் பாரீர் என்றும் வசைபாடி வருகின்றனர். நெட்டிசன்களோ தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காலையில் தூங்கி எழும்போது, அமைச்சர்களும், தலைவர்களும், நிர்வாகிகளும் என்ன செய்து வைத்திருக்கிறார்களோ என்கிற பயத்தோடுதான் கண்விழிக்க வேண்டி இருக்கிறது என்று நேற்றைய கூட்டத்தில்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதே கூட்டத்தில், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருப்பது ஸ்டாலினுக்கு பிரசரை ஏற்றி இருக்கிறது என்கிறார்கள்.