கமல், சீமான், திருமா, வெற்றிமாறனுக்கு பேரரசு, சரத்குமார், கஞ்சா கருப்பு பதிலடி!

கமல், சீமான், திருமா, வெற்றிமாறனுக்கு பேரரசு, சரத்குமார், கஞ்சா கருப்பு பதிலடி!

Share it if you like it

ராஜராஜசோழன் காலத்தில் ஹிந்து மதம் இல்லை என்று கூறிய கமல், சீமான், திருமா, வெற்றமாறன் உள்ளிட்டோருக்கு, பேரரசு, சரத்குமார், கஞ்சா கருப்பு, ராகவ் ஆகியோர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதிக்கப்பட்டு வருவது ராஜராஜசோழன் ஹிந்துவா இல்லையா என்பதுதான். ராஜராஜன்சோழன் காலத்தில் ஹிந்து என்றொரு மதமே இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் பற்ற வைத்த இந்த நெருப்பில், நடிகர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என பலராலும் எண்ணெய் ஊற்றப்பட்டு வருகிறது. கொளுந்து விட்டு எரியும் இந்த தீயை அணைக்க, ஹிந்துக்கள் தரப்பில் பதிலடி கொடுத்து தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே நடிகை கஸ்தூரி மற்றும் ஹிந்து அமைப்பினர் பலரும் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது இயக்குனர் பேரரசு, நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சின்னத்திரை நடிகர் ராகவ் ஆகியோர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, திரைப்பட இயக்குனர் பேரரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருமாவளவன் சொல்வதுபோல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்துவிடலாம். அதேபோல, தமிழகத்தையும் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள். மீண்டும் தெரு பெயர்களோடு ஜாதி பெயரையும் இணைத்து விடுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் இல்லை. ஆகவே, அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை. அதனால், முதலில் அந்த வார்த்தையை எங்கும் இல்லாமல் செய்து விடுங்கள். இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள். திருமாவளவன் சொல்வதுபோல் நாம் 2,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், மாமன்னன் ராஜராஜசோழன் புகழ் பரப்புவோம், உலகறியச் செய்வோம் என்கிற தலைப்பில் சரத்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராஜராஜசோழன் இந்துவா?… சைவமா?… வைணவமா?… சைவம் இந்து மதமா? என்பது பரபரப்பான சர்ச்சையாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது. 1790-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.

மேலும், கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா?தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்? சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஒரு நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, “இயக்குனர்கள் பழதை நினைத்துப் பார்ப்பதில்லை. ராஜராஜசோழன் ஹிந்துவா இல்லையா என்று தேவையில்லாமல் பேசி வருகிறார்கள். வந்தோமா நம்ம வேலையை பார்த்தோமா, பணத்தை சம்பாரித்தோமா, 10 வீட்டை வாங்கினோமா என்றில்லாமல், தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

தவிர, சின்னத்திரை நடிகர் ராகவ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ராஜராஜசோழன் காலத்தில் ஹிந்து என்ற மதமே கிடையாது என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், பாரதியார், மகாத்மா காந்தி இவர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குடிமகன்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இவர்கள் பிறந்தபோது இந்தியா என்றொரு நாடே கிடையாது. 1947-ம் விடுதலை பெற்ற பிறகுதான் அப்படியொரு நாடே உருவாகியது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆக மொத்தத்தில் ஹிந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.  


Share it if you like it